Home Featured தமிழ் நாடு சென்னை சரவணபவன் உணவகங்கள் மூடப்பட்டன

சென்னை சரவணபவன் உணவகங்கள் மூடப்பட்டன

998
0
SHARE
Ad

saravana-bhavan-restaurant

சென்னை – சென்னையின் தனித்துவமான அடையாளங்களுள் ஒன்று சரவணபவன் சைவ உணவகங்கள். விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் அதன் தூய்மை, உடனுக்குடன் உணவுகள் பரிமாறப்படுவது, சுவையிலும், தரத்திலும் குறையில்லாத தன்மை ஆகியவற்றால், தமிழ் நாட்டு மக்களிடத்திலும், சென்னை வரும் சுற்றுப் பயணிகளிடையேயும், சைவப் பிரியர்கள் மத்தியிலும் மிகப் பிரபலமானவை சரவணபவன் உணவகங்கள்.

ஆனால், நேற்று சென்னையில் உள்ள 9 சரவணபவன் உணவகங்களுக்கும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மூடும் உத்தரவை வழங்கி (சீல்) அந்தக் கடைகளை மூடியுள்ளனர்.

#TamilSchoolmychoice

கடந்த சில மாதங்களுக்கு முன் சரவண பவன் உணவகங்கள் விதிமுறைகளை மீறி நடத்தப்படுவதாகக் கூறி மாநகராட்சியினர் எச்சரிக்கை கடிதங்களை வழங்கினர் என்று கூறப்படுகின்றது.

மேலும் முறையான உரிமம் பெறாதது, போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாதது, என்பது போன்ற பல காரணங்களைக் காட்டி மாநகராட்சி அதிகாரிகள் இந்த உணவகங்களை மூடியுள்ளனர்.

சென்னை கேகே நகரில் 1981-ம் ஆண்டு முதன் முதலாகத் தொடங்கப்பட்ட சரவண பவன் உணவகங்கள் பின்னர் சென்னையின் பல இடங்களுக்கும் விரிவடைந்தன. ஒரு பலசரக்குக் கடை நடத்தி வந்த ராஜகோபால் அண்ணாச்சி என்பவர் சாதாரணமாக தூய்மையையும், சுவையையும் முன்னிறுத்தித் தொடங்கிய சரவணபவன் உணவகம் மிகப் பெரிய தொடர் உணவகங்களாக உருவெடுத்தது தனியான வணிக சாதனைகளுள் ஒன்றாகும்.

“சரவணபவன்” என்ற பெயரை ஒரு தாளில் எழுதி இந்தப் பெயரில் சைவ உணவகம் நடத்துங்கள் என மறைந்த திருமுருக கிருபானந்த வாரியார் ராஜகோபால் அண்ணாச்சியிடம் கூறினார் என்பது பரவலாகக் கூறப்படும் இன்னொரு தகவல். அதனால்தான், அனைத்து சரவண பவன் உணவங்களிலும் பெரிய அளவில் கிருபானந்த வாரியாரின் படம் மாட்டப்பட்டிருக்கும்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் சரவணபவன் உணவகக் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.