Home Featured நாடு “கேமரன்மலை தொகுதியை யாருக்கும் விட்டுத்தர மாட்டோம்” – சுப்ரா உறுதி

“கேமரன்மலை தொகுதியை யாருக்கும் விட்டுத்தர மாட்டோம்” – சுப்ரா உறுதி

770
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மஇகா வசமுள்ள 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை கட்சி மற்ற தேசிய முன்னணிக் கட்சிகளுக்கு விட்டுத் தராது என்றும் மஇகாவே அந்தத் தொகுதியில் போட்டியிடும் என்றும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் திட்டவட்டமாக அறிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் டாக்டர் சுப்ரா இதனைத் தெரிவித்தார்.

subra-mic-cwc-meeting-7 macநேற்று நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் (இடமிருந்து) அ.சக்திவேல், டாக்டர் சுப்ரா, எஸ்.கே.தேவமணி, எஸ்.ஏ.விக்னேஸ்வரன்..

#TamilSchoolmychoice

தேசிய முன்னணியின் மற்றொரு உறுப்பியக் கட்சியான மைபிபிபி, கேமரன் மலை தொகுதிக்குக் குறி வைத்துள்ளதாகவும், அங்கு மைபிபிபி தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் அண்மைய சில நாட்களாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதன் தொடர்பில் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நேற்று பதிலளித்த சுப்ரா “மஇகா 9 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும். மஇகாவின் தொகுதி என்ற முறையில் கேமரன் மலைத் தொகுதியிலும் போட்டியிடும். யாருக்கும் மற்ற எந்தக் கட்சிக்கும் அந்தத் தொகுதியை விட்டுத் தராது” என்றார்.

கடந்த பொதுத் தேர்தலில் மஇகா போட்டியிட்ட தொகுதிகளிலேயே மீண்டும் போட்டியிடுவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருவதாகவும், இதுவரையில் தொகுதி மாற்றங்கள் குறித்த பேச்சு வார்த்தைகளோ, கோரிக்கைகளோ தேசிய முன்னணி தலைமைத்துவத்திடம் இருந்து வராத நிலையில், கேமரன் மலை தொகுதி உட்பட அனைத்து மஇகா தொகுதிகளிலும் மீண்டும் மஇகாவே போட்டியிடும் என்றும் யாருக்கும் விட்டுத் தருவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் சுப்ரா உறுதிபடத் தெரிவித்தார்.

கேமரன் மலைத் தொகுதியில் மஇகா வேட்பாளர்கள்….?

ஒரு சில மஇகா தலைவர்கள் கேமரன் மலைத் தொகுதியில் முகாமிட்டுப் பிரச்சாரங்கள் செய்து வருவது குறித்தும், அந்தத் தொகுதியில் போட்டியிடப் போவதாக மறைமுகமாகத் தெரிவித்து வருவதும் குறித்தும் கேட்கப்பட்டபோது, “மத்திய செயலவையின் உறுப்பினர்கள், மஇகா தலைவர்கள் என அனைவரையும் மஇகா தொகுதிகளுக்கும், இந்திய வாக்காளர்கள் அதிகமுள்ள எல்லா இடங்களுக்கும் நாங்கள் பிரச்சாரம் செய்யப் பணித்துள்ளோம். அதன்படி மஇகா தலைவர்கள் எல்லாத் தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரங்கள் செய்துவருகிறார்கள். யாரையும் நாங்கள் தடை செய்யவில்லை. அதே சமயத்தில் இந்தத் தொகுதியில் மட்டும்தான் வேலை செய்யுங்கள், பிரச்சாரங்கள் செய்யுங்கள் என குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் வேலை செய்வதற்கு யாருக்கும் நாங்கள் கட்டளையிடவில்லை. அதே போன்று ஒரு தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து மஇகா தலைமைத்துவம் பிரதமரின் ஒப்புதலோடு இறுதி முடிவு செய்யும்” என்று சுப்ரா கூறினார்.

இதுபோன்று மஇகா தலைவர்கள், தொகுதிகளுக்கு சென்று பிரச்சாரங்கள் செய்வது மஇகா பொதுத் தேர்தலுக்குத் தயாராகி வருவதையே காட்டுகிறது என்றும் மஇகா போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தல் இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், சுப்ரா மேலும் தெரிவித்தார்.

“நானே நேரடியாக பல பகுதிகளுக்குச் சென்று மஇகாவின் தேர்தல் பணிகள், தேர்தல் இயந்திரங்களைக் கண்காணித்து வருகிறேன். நடப்பு வாக்காளர்களை அடையாளம் காண்பது, புதிய வாக்காளர்கள் பதிவு, என்பது போன்ற நடவடிக்கைகளில் மஇகா தற்போது தீவிரம் காட்டி வருகிறது” என்றும் சுப்ரா குறிப்பிட்டார்.