கோலாலம்பூர் – தற்போது கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் சங்கப் பதிவகம்-மஇகாவுக்கு எதிரான வழக்கிலிருந்து, அந்த வழக்கைத் தொடுத்திருக்கும் வாதிகள் விலகிக் கொள்வதற்காக, ஒரு குறிப்பிட்ட தொகையிலான பணம் அவர்களுக்குக் கொடுக்க, பேச்சுவார்த்தைகளின் வழி பேரம் பேசப்பட்டிருக்கிறது என கடந்த சில நாட்களாக, இணைய ஊடகங்களிலும், தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளில் உண்மையில்லை என மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ அ.சக்திவேல் தெரிவித்திருக்கிறார்.
“இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கிடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட அதிகாரபூர்வ கடிதப் போக்குவரத்து தவிர, வேறு எந்த வகையிலும், அதுபோன்ற பேச்சுவார்த்தை பேரங்கள் யாருடனும் நடத்தப்படவில்லை என மஇகா சார்பாக உறுதியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எனவே, இந்த பேச்சுவார்த்தை பேரங்கள் குறித்த செய்திகள் யாவும் அடிப்படையற்றவை, தீய உள்நோக்கம் கொண்டவை, உண்மையற்ற பொய் செய்திகள், எனவும் வலியுறுத்த விரும்புகிறேன்” என்றும் சக்திவேல், இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தார்.
“எனவே, இதுபோன்ற பொய்ச் செய்திகளைப் பரப்புவதை சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், இத்தகைய உண்மையற்ற, அடிப்படையற்ற செய்திகளைப் பரப்பும், வெளியிடும் தரப்பினர் மீது நீதிமன்றத்தின் மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் மஇகா தயங்காது” என்றும் சக்திவேல் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்திருக்கிறார்.
அதேவேளையில் இதுவரையில் வெளியிடப்பட்டிருக்கும் உண்மையற்ற செய்திகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள, அவதூறு சட்டங்கள், நீதிமன்ற அவமதிப்பு, நீதிமன்ற விசாரணையில் இருக்கும் வழக்கின் மீது அவதூறான கருத்துக்களைத் தெரிவித்தல் (subjudice) போன்ற கோணங்களிலும், கிரிமினல் குற்றங்கள் புரியப்பட்டிருக்கின்றனவா என்ற அடிப்படையிலும் ஆராயுமாறு தனது வழக்கறிஞர்களுக்கு மஇகா உத்தரவிட்டிருக்கின்றது என்றும் சக்திவேல் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.