Home Featured நாடு சுப்ராவின் சித்திரைப் புத்தாண்டு – விஷூ – வைசாகி வாழ்த்துகள்!

சுப்ராவின் சித்திரைப் புத்தாண்டு – விஷூ – வைசாகி வாழ்த்துகள்!

1296
0
SHARE
Ad

subra-chithirai new message

இன்று வெள்ளிக்கிழமை 14 ஏப்ரல் 2017-ஆம் நாள் மலரும் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

அதே வேளையில் விஷூ புத்தாண்டைக் கொண்டாடி மகிழும் சகோதர மலையாள சமூகத்தவர்களுக்கும், வைசாகி புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருக்கும் சீக்கிய சமூகத்தினருக்கும் டாக்டர் சுப்ரா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

“சித்திரை முதல் நாளை இந்து புத்தாண்டாகக் கொண்டாடும் அனைத்து இந்துகளுக்கும், விஷுப் புத்தாண்டை வரவேற்கக்கூடிய அனைத்து மலையாள வம்சாவளியினருக்கும் வைசாகி பெருநாளைக் கொண்டாடக்கூடிய சீக்கிய அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரை மாதம் வரவேற்கப்படுகிறது. சித்திரை மாதம் பிறந்ததுமே ‘இளவேனிற்காலம்’ எனும் வசந்த காலம் தொடங்குகிறது. அதுபோல் மலேசிய நாட்டு இந்தியர்களின் வாழ்விலும் வசந்தகாலம் மலர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என தனது வாழ்த்துச் செய்தியில் சுப்ரா குறிப்பிட்டார்.

“ஹேவிளம்பி” ஆண்டு இந்து புத்தாண்டைக் கொண்டாடவிருக்கும் அனைவருக்கும் புத்துணர்ச்சி, புதிய சிந்தனை, ஐக்கியம், சமயம், சமூகம், கலாச்சாரம், பண்பாடு, அமோக வெற்றி போன்றவற்றை எடுத்துக் காட்டும் வகையில் இந்நாள் அமைய வேண்டும். நல்லெண்ணம், நல்லுறவு, அன்பு, விருந்தோம்பல் போன்ற மனிதப் பண்பாட்டின் உயர்ந்த அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாடப்படும் சித்திரை திருநாளில் சுகாதாரத்தைப் பேணிக் காப்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும்” என்றும் சுப்ரா தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.

“தற்பொழுது மலேசிய நாட்டுச் சூழலில் இந்தியர்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். அவ்வகையில் பிறக்கும் சித்திரையில், நமது கனவுகளையும் முயற்சிகளையும் நிறைவேற்ற நாம் அனைவரும் புத்தாக்கச் சிந்தனையோடு செயல்பட்டு; புதியதொரு சமுதாயமாக உருவெடுக்க வேண்டும். எல்லா நிலையிலும் உருமாற்றத்தைக் கொண்டு வரவேண்டிய கடப்பாடு தற்பொழுது நமக்கு அதிகமாக இருக்கின்றது.அவ்வகையில், இந்திய சமுதாயத்தின் மேம்பாடு கருதி “இந்தியர் மேம்பாட்டு வியூக வரையறைத் திட்டம்” இம்மாதம் பிரதமர் அவர்களால் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றது. இத்திட்டம் அடுத்த 10 ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்படும். அவ்வகையில், அரசாங்கம் வழங்கக்கூடிய சலுகைகளைப் பயன்படுத்தி கல்வி, பொருளாதாரம், வாழ்வாதாரம் அனைத்திலும் முன்னேற்றம் கண்ட சமுதாயமாக உருமாற்றம் காண வேண்டும்” என்ற தனது நம்பிக்கையையும் சுப்ரா தனது வாழ்த்துச் செய்தியில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

“நம் நாட்டில் இந்தியர்களின் 7% ஆகும். குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், தமிழ், மலையாளம், தெலுங்கு, சீக்கிய வம்சாவளியினர் என்னும் வேறுபாடுகளைக் களைந்து, எல்லா நிலையிலும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு நாம் மிகப் பெரிய உந்து சத்தியாகத் திகழ வேண்டும் என்பதே சமுதாயத் தலைவர் எனும் முறையில் எனது ஆசையாகும். எனவே, புதியதோர் உருமாற்றத்திற்கு நம்மிடையே இருக்கும் வேறுபாடுகளை ஒதுக்கி ஒரே குரலில் ஒலித்து ஒரே நோக்கத்துடன் செயல்பட வேண்டும். அனைவரும் ஒரே குரலில் இயங்கினால்தான் இந்நாட்டில் இந்தியர்களின் உரிமைகளை நிலைநிறுத்த முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றும் சுப்ரா தனது புத்தாண்டு செய்தியில் கேட்டுக் கொண்டார்.

60 ஆண்டுகளின் சுற்றுவட்டத் தொடரில் 31 ஆவது ஆண்டான “ஏவிளம்பி” ஆண்டு மலேசியா வாழ் அனைத்து இந்துகளுக்கும் எல்லா நிலையிலும் மாற்றம் கொண்டு வரும் ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும்  சுப்ரா தெரிவித்தார்.