Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘பாகுபலி 2’ – கட்டப்பா நல்லவரா? கெட்டவரா?

திரைவிமர்சனம்: ‘பாகுபலி 2’ – கட்டப்பா நல்லவரா? கெட்டவரா?

1364
0
SHARE
Ad

Bahubaliகோலாலம்பூர் – படம் பார்க்கலாமா? என்ற பேச்சுக்கே இடமில்லாமல், சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத அற்புதமான திரையரங்கு அனுபவம் கொடுக்கும் ஒரு திரைப்படம் ‘பாகுபலி 2’.

பாதியில் படித்து வைக்கப்பட்ட சுவாரசிய நாவல் போல், பாகுபலி முதலாம் பாகத்தைப் பார்த்தவர்களுக்கு, அவசியம் இரண்டாம் பாகம் பார்த்தே ஆக வேண்டிய கட்டாயத்தைக் கொடுத்தது, “கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?” என்ற கேள்வி தான். அதற்கான பதில் இரண்டாம் பாகத்தில் உள்ளது. இதற்கு மேல் இக்கதையைக் கொண்டு போக இயலாது என்று முடிவெடுத்துவிட்ட இயக்குநர் ராஜமௌலி, மிகத் தெளிவாக, இது தான் கடைசிப் பாகம் என்பதைத் தலைப்பிலேயே அறிவித்துவிட்டார்.

சரி.. இவ்வளவு எதிர்பார்ப்புகளோடு வெளிவந்திருக்கும் ‘பாகுபலி 2’ திரைப்படத்தில் பார்த்து ரசிக்க என்னவெல்லாம் இருக்கிறது?

#TamilSchoolmychoice

1. போன பாகத்தில் அரசன் பாகுபலியின் வீரத்தைப் பற்றியும், போர் திறமைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. இந்த முறை பாகுபலி தேவசேனையை (அனுஷ்கா) முதன்முதலாகச் சந்திப்பது, காதல் கொள்வது, திருமணம் என முதல் பாதியில் ஒரு அரச குடும்பத்தில் நடக்கும் திருமண சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

2. ராஜமாதா சிவகாமியாக உருட்டும் விழிகளும், ராணிக்கே உரிய மிடுக்குமாய் அசத்தியிருந்த ரம்யா கிருஷ்ணன், இப்பாகத்தில் அதை விட மிகவும் மிரட்டலாக நடித்திருக்கிறார். ராஜ்யத்தில் நடக்கும் முட்டல் மோதல்களும், அதனால் முடிவுகள் எடுப்பதில் சிக்கித் தவிப்பதுமாக அற்புதமான நடிப்பு. உடல்மொழியும், கண்களும் …அப்பப்பா..

Bahubali-Anushka3. அனுஷ்காவை இவ்வளவு சிக்கென்று பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. தொடர்ந்து உடல் எடை கூடி, பார்க்க முதிர்ச்சியான தோற்றத்திலேயே இருந்து வந்த அனுஷ்கா, இப்படத்தில் மிகவும் எடை குறைந்து இளமையோடு காணப்படுகின்றார். வாள் வீச்சிலும், உடல்மொழியிலும் கூட இளமை ததும்புகிறது.

4.பல்வால் தேவனாக ராணா.. போன பாகத்தைப் போல் இந்தப் பாகத்திலும் அரக்க குணம் படைத்தவனாக சிறப்பாக நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளிலெல்லாம் அவரது முகபாவனைகளும், உடற்கட்டும் பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கின்றது.

5. அதே போல் நாசருக்கு, இப்பாகத்திலும், சூழ்ச்சி, வன்மம், கோபம், இயலாமை, பயம் என முகத்தில் பலவித பாவனைகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம். அதனை மிகவும் தத்ரூபமாகச் செய்திருக்கிறார்.

6. கட்டப்பாவாக சத்யராஜ்.. முதல் பாகத்தில் கம்பீரமும், இறுக்கமுமாக இருந்தவர். இம்முறை பாகுபலிக்கு நெருங்கிய உறவாக, பல காட்சிகளில் கலகலப்பாக வந்து போகிறார். அதேபோல், பாகுபலியைக் கொல்லும் காட்சிகளில் சத்யராஜின் நடிப்பு நிச்சயமாக கண்ணீர் வரவழைத்துவிடும் அளவிற்கு அவ்வளவு இயல்பாக இருக்கிறது.

bahubali_2454474f7. இடைவேளை வருவதற்கு முன்பு ஏறக்குறைய 10 நிமிடங்கள் திரையரங்கை அதிரவைத்து படம் பார்க்கும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துவிடுகிறார்கள்.

8. இவர்கள் தவிர, சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கும் பிரம்மாண்டம்.. இப்பாகத்தில் முன்பை விடக் கூடுதலாகவே இருக்கிறது. மகிழ்மதி ராஜ்யத்தையும், கடற்பகுதிகளையும், அரச படைகளையும் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் ஹாலிவுட்டுக்கு நிகர்.

கே.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவிலும், சிஜி எனப்படும் பின்னணி தொழில் நுட்ப வேலைபாடுகளிலும் தனது அழகால் சொக்க வைக்கிறது படம். புராண காலத்தில் இருந்த ராஜ்யங்களை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

9. கீரவாணியின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு இன்னொரு மிகப் பெரிய பலம்.

திரைக்கதை

படம் தொடங்கி முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு தான் சுவாரசியமே ஆரம்பிக்கிறது. அதுவரை, அரசரின் நகர்வலம், அனுஷ்காவுடன் காதல், திருமணம் என இழுத்திருக்கிறார்கள். பாகுபலி முதல்பாகத்தை எடுத்துக் கொண்டால், படம் தொடங்கியதில் இருந்து முடிவு வரை எங்குமே தொய்வில்லாமல் கதையை நகர்த்திச் சென்றிருப்பார்கள். தீவிரமான பெண்ணாகக் காட்டப்படும் தமன்னாவைக் கூட, காதல் பாடல் ஒன்றில் நடிக்க வைத்து ரசிகர்களை எங்குமே நகரவிடாமல் செய்திருப்பார் இயக்குநர்.

இப்பாகத்தில் பிரபாஸ், அனுஷ்கா இடையிலான காதல் பட்டும் படாமலும் தான் சொல்லப்பட்டிருக்கிறது. தமன்னாவும் கடைசிக் காட்சிகளில் இரண்டு மூன்று இடங்களில் தலைகாட்டுகிறார் அவ்வளவு தான். எனவே காதலை எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே.

Bahubali2அதேபோல், கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்று தெரிந்தவுடனே கதையின் வேகமும், சுவாரசியமும் குறைந்துவிடுகின்றது. அதன் பின்னர், படம் முடியும் வரை சண்டைக்காட்சிகளை வைத்து தான் முடித்திருக்கிறார்கள். ராணாவும், பிரபாசும் சண்டை போடுவது இரண்டு மாமிச மலைகள் சண்டை போடுவது போல் பயங்கரமாக இருந்தாலும் கூட,  சுமார் 20 நிமிடங்களுக்கு சண்டைக் காட்சி மட்டுமே இருப்பதால், சலிப்பையே ஏற்படுத்துகிறது.

ரம்யா கிருஷ்ணன் எடுக்கும் முடிவு ஒன்று லாஜிக் இல்லாமலும், கட்டப்பாவின் காட்சி ஒன்றில் காலகேயர்கள் ஏன் அங்கு வந்தார்கள் என்று புரியாமலும் போகிறது.

இப்படியாகப் படத்தில் சில இடங்கள் திருப்தியளிக்காமல் போகிறது. என்றாலும், “கோழை தன்னை வீரன் என நிரூபிக்க கிடைக்கும் சந்தர்ப்பம்”, “உயிர் போவது இயற்கை. ஆனால் அதனை பிடித்து வைப்பதே சத்ரியனின் பலம்”, இப்படியாகப் புல்லரிக்க வைக்கும் வசனங்களும், காட்சிகளும் நிறையவே இருக்கிறது என்பதே பாகுபலியின் மிகப் பெரிய பலம்.

இப்படி ஒரு பிரம்மாண்டமான சரித்திரப் படம் மீண்டும் இந்திய சினிமாவில் எப்போது எடுக்கப்படும் எனத் தெரியாது. ஆனால் பாகுபலி என்ற மாவீரனின் கதை நிச்சயமாக மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.

-ஃபீனிக்ஸ்தாசன்