Home கலை உலகம் திரைவிமர்சனம் : “சந்திரமுகி 2” – மிரட்டவில்லை; ஈர்க்கவில்லை!

திரைவிமர்சனம் : “சந்திரமுகி 2” – மிரட்டவில்லை; ஈர்க்கவில்லை!

438
0
SHARE
Ad

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரமுகி 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை மிரட்டவில்லை. முதல் படத்தில் இருந்த ரஜினியின் நடிப்பு சாகசம், கதையில் திடீரென ஏற்படும் திருப்பங்கள், வேட்டையன்-சந்திரமுகி கதாபாத்திரங்களின் சுவாரசியங்கள் – இப்படி எல்லாமே இரண்டாம் பாகத்தில் ரசிக்கத்தக்க அளவில் அமையவில்லை.

முதலாம் பாகத்தில் ஏற்கனவே சொல்லப்பட்ட அதே கதையை மீண்டும் 17 வருடங்களுக்குப் பிறகு சொல்லிய விதமும்  போரடிக்கிறது.

ராகவா லாரன்ஸின் கதாபாத்திரம் ஏன் உள்ளே வருகிறது? அதன் பின்னணி என்ன’ என்பது போன்ற விவரங்களையும் படத்தில் விளக்காததால் படத்துடன் – அவரின் கதாபாத்திரத்துடன் – நம்மால் ஒட்ட முடியவில்லை. எப்படி ரஜினியை சந்திரமுகி வேட்டையனாக முதல் பாகத்தில் ஜோதிகா உருவகப்படுத்தினாரோ, அதே போல இந்தப் படத்திலும் ராகவா லாரன்சை வேட்டையனாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள். அது நம்பும்படி இல்லை!

#TamilSchoolmychoice

படத்தில் காட்டப்படும் நான்கு அல்லது ஐந்து பெண் கதாபாத்திரங்களில் யார் சந்திரமுகி என்பதை சஸ்பென்சாக வைத்திருந்து இடைவேளையில் காட்டுகிறார்கள். அது யார் என்பதை திரையில் காண்க!

சந்திரமுகி – 2 படத்தின் கதை – திரைக்கதை

சந்திரமுகி முதலாவது பாகத்தில் காணப்பட்ட பங்களா அமைந்திருக்கும் ஊரில் இருக்கும் மாரியம்மன் ஆலயத்தை  குலதெய்வமாகக் கொண்டது ராதிகாவின் குடும்பம். அவரின் அண்ணன் சுரேஷ் மேனன். தங்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளை தீர்க்க, குலதெய்வ வழிபாட்டுக்கு அவர்கள் குடும்பத்தோடு அங்கு வருவதும் சந்திரமுகி பங்களாவில் மாளிகையில் தங்குவதும் தான் கதை.

முதலாவது பாகத்தில் அந்தப் பங்களாவின் வேலைக்காரனாக வந்த முருகேசன்-வடிவேலுதான் இப்போது அந்த மாளிகையின் உரிமையாளர்.

பெரிய குடும்பம் தங்க வேண்டியிருப்பதால் அந்த சந்திரமுகி மாளிகையை அவர்களுக்கு வாடகைக்கு விடுகிறார் வடிவேலு. அங்கு அவர்கள் எதிர்நோக்கும் சம்பவங்கள்தான் படம்.

படத்தின் இறுதி அரை மணி நேரத்தில் வழக்கம் போல் வேட்டையன்-சந்திரமுகியின் பழைய வரலாற்றுக் கதையை காட்டுகிறார்கள். இடையில் எதற்கு வருகிறது எனத் தெரியாமல் கதைக்குள் வரும் பெரிய மலைப்பாம்பு, நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழும் சித்தர் சாமியார், பங்களாவுக்கு வெளியே குடிசையில் வாழும் அழகான கதாநாயகி (மஹிமா நம்பியார்) – இவர்களும் உண்டு!

படம் முழுக்க ஆக்கிரமிக்கும் வடிவேலு

படத்தின் ஆறுதலான அம்சம் முருகேசனாக வரும் வடிவேலு. படம் முழுக்க அவர்தான் கதையை நகர்த்திச் செல்கிறார். இருந்தாலும் அவருக்கு என வலுவான சம்பவங்கள் – வசனங்கள் – அமையாததால் அவராலும் தன் கதாபாத்திரத்தில் பிரகாசிக்க முடியவில்லை. அவரின் கோணங்கித் தனங்களில் பலவற்றை ஏற்கனவே பார்த்து விட்டதால் புதிதாக ரசிப்பதற்கு அவரால் எதையும் தர முடியவில்லை. அவர் மாமன்னன் போன்று குணசித்திரக் கதாபாத்திரங்களுக்குள் செல்வது நல்லது.

ராகவா லாரன்சுடன் வடிவேலு பேசும் வசனங்கள் சில சமயங்களில் வளவளவென்று போர் அடிக்க இருக்கின்றன.

ராகவா லாரன்சின் முதல் அறிமுக சண்டைக் காட்சியும் வேண்டுமென்றே திணிக்கப்பட்டிருக்கிறது.

ரசிக்க வைக்கும் அழகுப் பதுமை கங்கனா  ரானாவத்

படத்தில் ரசிக்க வைக்கும் – எதிர்பார்க்க வைக்கும் – இன்னொரு கதாபாத்திரம் சந்திரமுகியாக வரும் கங்கனா  ரானாவத். சந்திரமுகியின் பரதநாட்டிய உடையில் அவரிடம் அழகும் இளமையும் கவர்ச்சியும் துள்ளி விளையாடுகிறது.
படத்தின் பாதிக்குப் பின்னர் தான் அவர் கதையில் சந்திரமுகியாக காட்டப்படுகிறார்.

வேட்டையன் கதையை புதிதாக ஏதோ சொல்லப் போகிறார்கள் என்று பார்த்தால் – நாம் சந்திரமுகி முதலாம் பாகத்தில் பார்த்த கதையை கொஞ்சம் விரிவாக்கி சொல்லி இருக்கிறார்கள்! அவ்வளவுதான்,

கங்கனா ரனாவத்தின் கதாபாத்திரமும் நடனங்களும் கண் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டிருப்பதுதான் படத்தின் ஒரே சிறப்பு அம்சம்.

மற்றபடி எத்தனையோ படங்களில் பார்த்தபடி – ஒரு பிரம்மாண்டமான பங்களா – அதில் மூடப்பட்ட ஓர் அறை – இருட்டு வேளையில் நிழலாக, கறுப்பாக உருவங்கள் தெரிவது – என ஏற்கனவே நூற்றுக்கணக்கான முறை தமிழ் இயக்குனர்கள் அரைத்த மாவையே பி வாசுவும் அரைத்து இருப்பது நெருடல்!

சந்திரமுகி முதல் பாகம் வந்தபோது அதில் காணப்பட்ட அம்சங்கள் எல்லாமே புதுமையாக இருந்தன. அதில் உச்சகட்டம் வேட்டையனாக வரும் ரஜினியின் நடிப்பு என்பதை சொல்லத் தேவையில்லை. இந்தப் படத்தில் ரஜினியின் வேட்டையன் கதாபாத்திரத்தில் யாரோ ஒரு புதுமுகத்தைக் காட்டுகிறார்கள். ராகவா லாரன்ஸ் வேட்டையனின் நண்பன் செங்கோட்டையனாம்!

கதாநாயக பாத்திரத்தில் ராகவா ஜொலிக்கவில்லை .நடனங்கள் மட்டும் சிறப்பாக ஆடிக் காட்டுகிறார். அவ்வளவுதான்!

படத்தின் இறுதிக் காட்சிகளிலும் பிரம்மாண்டம் தெரியும் அளவுக்கு திருப்பங்களும் சுவாரசியங்களும் இல்லை.

இதே கதைதான் ரஜினிக்கும் சொல்லப்பட்டதா? அதனால்தான் அவர் இதில் நடிப்பதற்கு – சிக்காமல் தப்பித்துக் கொண்டாரா? ஆராயப்பட வேண்டிய விஷயம்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் வடிவேலுவின் நடிப்பு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கவும் – தலைவி படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக கங்கனா ரனாவத் நடிக்கும் தமிழ் படத்தில் அவர் எப்படி நடித்திருக்கிறார் என்பதைக் காணவும் – சந்திரமுகி-2 படத்தை ஒரு முறை பார்க்கலாமே தவிர, மற்றபடி இரண்டாவது சந்திரமுகி நம்மை மிரட்டவும் இல்லை – ஈர்க்கவும் இல்லை!

– இரா.முத்தரசன்