புதுடில்லி – நாளை திங்கட்கிழமை சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கும் சீனாவில் ‘மண்டலம் மற்றும் சாலை’ (Belt and Road Forum) மீதான உச்சநிலை மாநாட்டைப் புறக்கணிப்பதாக இந்தியா அறிவித்திருக்கின்றது.
இந்தியாவின் தன்னாட்சி உரிமைகள், பிரதேச உரிமைகளை மீறும் ஒரு திட்டத்தை தனது அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சின் பேச்சாளர் கோபால் பக்லே நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதே திட்டத்தை ஆதரிக்கும் பல நாடுகளில் மலேசியாவும் ஒன்று. நாளை தொடங்கும் மாநாட்டில் பிரதமர் நஜிப் கலந்து கொள்ள சீனா சென்றிருக்கிறார்.
சீனாவின் மண்டலம் மற்றும் சாலை திட்டத்தின் உத்தேச வரைபடம்…
சீனாவின் இந்தத் திட்டத்தின் மையமாகத் திகழ்வது சீனா – பாகிஸ்தான் இடையில் திட்டமிடப்பட்டிருக்கும் பொருளாதார மண்டலம் ஆகும். இந்தத் திட்டம் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் வழியாகச் செல்கின்றது. ஆனால் இந்தியாவோ பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் உட்பட ஜம்மு-காஷ்மீர் முழுவதும் இந்தியாவுக்கு சொந்தம் என உரிமை கோருகின்றது.
நாடுகளை பொருளாதார மண்டலங்களாக இணைக்கும் நடவடிக்கைகள் என்பது மற்ற நாடுகளின் தன்னாட்சி உரிமைகளை மதிப்பதாக இருக்க வேண்டும் என்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக நடைமுறைகள், சிறந்த அரசு நிர்வாகம், சட்ட திட்டங்களைப் பின்பற்றுதல், திறந்த முறையிலான வெளிப்படைத் தன்மை நிர்வாகம், சம உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட என்றும் இந்தியா வலியுறுத்தியிருக்கிறது.