சென்னை – நடிகர் ரஜினிகாந்த் இன்று திங்கட்கிழமை சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், தனது ரசிகர்களைச் சந்தித்தார்.
அதில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து கூறியிருப்பதாவது:-
“25 வருஷத்துக்கு முன்னால, ஒரு அரசியல் விபத்து என்று சொல்லலாம். அந்த சமயத்துல சில சூழ்நிலைகள் காரணமாக சில கூட்டணிக்கு நான் ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ்மக்களும் அந்தக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வெற்றியடைச் செய்தார்கள். அப்போதிலிருந்து என்னுடைய பெயர் அரசியலில் அடிப்பட ஆரம்பித்துவிட்டது. என்னுடைய ரசிகர்களும் சில பேர் அரசியலில் ஆர்வமா ஈடுபட்டார்கள். அரசியல்வாதிகளும் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அதில் நிறைய பணம் கூடப் பார்த்துவிட்டார்கள். பூனை ருசி கண்ட மாதிரி அந்த ருசி அவர்களுக்குத் தெரிந்து போச்சு.”
“அடுத்தடுத்து தேர்தல் வரும் போது, இவர்கள் அவர்களை நாடுவது, அவர்கள் இவர்களை நாடுவது போன்றவை நடக்க ஆரம்பித்தது. நான் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்று அவர்களாகவே சொல்ல ஆரம்பித்தார்கள். அதனால், ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும், நான் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று சொல்ல வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன். நான் என்னவோ பெரிய அரசியல் தலைவனோ, சமூக சேவகனோ, எல்லாரும் என்னுடைய ஆதரவிற்காகக் காத்திருக்கிறார்கள் என்பதோ கிடையாது. நான் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. என் பெயரைச் சொல்லி யாருக்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என்று சொல்றதுக்காக தான் அப்படி சொல்றேன்.”
“சில ரசிகர்கள் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாமும் எப்போது கவுன்சிலராவது, எப்போது எம்எல்ஏ ஆவது? எப்போது காசு பார்ப்பது? என்று தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதுகிறார்கள். கவுன்சிலராகலாம், எம்எம்ஏ ஆக ஆசைப் படலாம் அதில் தப்பில்லை. ஆனால் அதை வைத்துக் காசு பார்க்க வேண்டும் என்று நினைப்பது தவறு. என்னைப் பொறுத்தவரை என்னை இயக்குவது கடவுள் தான். அவரின் கைகளில் தான் எல்லாம் இருக்கிறது. இப்போது என்னை ஒரு கலைஞனாக மட்டுமே வைத்திருக்கிறார். அந்தக் கடமையை நான் சரியாகச் செய்து மக்களை மகிழ்ச்சிபடுத்துகிறேன். எதிர்காலம் எப்படி இருக்குமோ தெரியாது. ஒருவேளை அரசியல் ஈடுபடவில்லை என்றால் அவர்கள் எல்லாம் ஏமாந்து போவார்கள். ஒருவேளை அரசியலில் ஈடுபடும் நிலை வந்தால், அந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் பக்கத்துல கூட சேர்க்கமாட்டேன். நுழையக்கூட விடமாட்டேன். ஆக.. இப்பவே சொல்றேன் ..ஒதுங்கிடுங்க..” – இவ்வாறு ரஜினி தெரிவித்தார்.