Home நாடு “சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு பொங்கல் சிறப்பு விடுப்பு இல்லை” – மணிமன்றம் அதிருப்தி

“சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு பொங்கல் சிறப்பு விடுப்பு இல்லை” – மணிமன்றம் அதிருப்தி

1518
0
SHARE
Ad

கோலாலம்பூர் – விடிந்தால் பொங்கல் திருநாள். மகிழ்ச்சி பொங்கும் இத்தருணத்தில் “சிறப்பு விடுப்பு இல்லை” என்று சிலாங்கூர் கல்வி இலாகா சனிக்கிழமை அனுப்பிய திடீர் செய்தியால் மகிழ்ச்சியை இழந்து நிற்கின்றனர் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 97 தமிழ்ப் பள்ளிகளைச் சார்ந்த தமிழாசிரியர்கள்.

காலங்காலமாக பொங்கல், தமிழர் திருநாளுக்குச் சிறப்பு விடுப்புகளை எடுத்து வந்த ஆசிரியர்கள் இம்முறையும் அவ்விடுப்பினை விண்ணப்பித்து மாவட்ட கல்வி இலாகாவினரிடமிருந்து அனுமதியும் பெற்றிருந்தனர். கடைசி நேரத்தில் விடுமுறையை இரத்து செய்வதாக சிலாங்கூர் கல்வி இலாகா அனுப்பிய கடிதத்தால் தமிழாசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்திருப்பதாக சிலாங்கூர் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தலைவர் மணிமைந்தன் மு.முனியாண்டி (படம்) தெரிவித்தார்.

பொங்கல் தேசிய விழாவாக அனைவராலும் மற்றும் மாநில அரசாங்கங்களாலும் கொண்டாடப்படும் பட்சத்தில் கல்வி இலாகாவின் இது போன்ற நடவடிக்கை அதிருப்தி அளிப்பதாக முனியாண்டி கூறினார்.

#TamilSchoolmychoice

புதிய மலேசிய அரசாங்கத்தின் கீழ் மூவினம் கொண்டாடும் சமயம்,மொழி, பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு சரிசமமான அங்கீகாரம் கொடுக்கப்படும் என்று எண்ணியிருந்த ஆசிரியர் சமூகத்திற்கு கல்வி இலாகா ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டதாக முனியாண்டி கூறினார்.

பள்ளிகளுக்கு வருடத்தில் 4 நாட்கள் சிறப்பு விடுமுறை உள்ளது. பொங்கலுக்கு இதுநாள்வரை சிறப்பு விடுமுறையை வழங்கிய கல்வி அமைச்சு இம்முறை முடியாது என்று சொல்லி ஈடு கட்டும் விடுமுறைக்கு (Replacement) மட்டுமே அனுமதியை வழங்கி உள்ளது.

பொங்கலுக்கு தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்கி வந்த சிறப்பு விடுமுறையை கல்வி இலாகா மீண்டும் நிலை நாட்ட வேண்டும். இது தமிழாசிரியர்களுக்கு மட்டுமல்ல அனைத்துத் தமிழர்களின் உணர்வுகளுக்குக் கொடுக்கும் மரியாதையாகும் என்றார் முனியாண்டி.