Home வணிகம்/தொழில் நுட்பம் ஐஓஐ நிறுவனத்தின் தோற்றுநர் லீ ஷின் செங் காலமானார்

ஐஓஐ நிறுவனத்தின் தோற்றுநர் லீ ஷின் செங் காலமானார்

907
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஐஓஐ என்ற நிறுவனத்தைத் தோற்றுவித்து அதனை மலேசியாவின் மிகப் பெரிய வணிகக் குழுமமாக உருமாற்றிய டான்ஸ்ரீ லீ ஷின் செங் நேற்று சனிக்கிழமை, (ஜூன் 1) காலை 8.30 மணியளவில் காலமானார்.

ஒரு தோட்டப் பின்னணியில் சாதாரணத் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கிய லீ ஷின் செங், வணிகத்தில் ஈடுபட்டு நிறையத் தோட்டங்களை வாங்கினார், செம்பனைத் தொழிலில் முன்னணி வகித்தார் என்பதோடு, மலேசியாவின் முதல் 10 மிகப் பெரிய பணக்காரர்கள் வரிசையில் அடிக்கடி இடம் பெற்று வந்தார்.

உலகப் புகழ்பெற்ற வணிகப் பத்திரிக்கையான போர்ப்ஸ் அவரை 2018-ஆம் ஆண்டில். 5.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளைக் கொண்டிருக்கிறார் என மலேசியாவின் 5-வது மிகப் பெரிய பணக்காரராகப் பட்டியலிட்டது.

#TamilSchoolmychoice

நன்றாகத் தமிழில் உரையாடும் திறனை அவர் கொண்டிருந்தார் என்பது அவரை நெருக்கமாக அறிந்தவர்களுக்கே தெரிந்த ஒன்று!

நாளை திங்கட்கிழமை (ஜூன் 3) தனது 80-வது பிறந்த நாளைக் கொண்டாடவிருந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அவர் மரணமடைந்திருக்கிறார்.

நில மேம்பாட்டுத் திட்டங்களிலும் ஆர்வம் காட்டிய அவர் பூச்சோங்கில் கொண்டிருந்த தோட்டங்களை மேம்படுத்தி ஐஓஐ வீடமைப்புத் திட்டங்களாக உருவாக்கினார். இன்று பூச்சோங்கில் இருக்கும் பல வீடமைப்புத் திட்டங்கள் அவரது முயற்சியின் காரணமாக உருவாகியவை என்பதோடு,  பூச்சோங், நாட்டின் முன்னணி நகராக உருமாற்றம் கண்டதற்கும் அவர் முக்கியப் பங்காற்றினார்.

ஐஓஐ நிறுவனத்தை 1969-இல் தோற்றுவித்த லீ, 1983-இல் செம்பனைத் தோட்டத் தொழிலில் தனது ஈடுபாட்டை விரிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து தோட்டங்களை வீடமைப்புத் திட்டங்களாக உருமாற்றும் தொழிலில் அவர் ஈடுபட்டார்.

லீயின் இளைய மகன் லீ இயோ சென் கடந்த மார்ச் மாதத்தில் ஜசெகவைச் சேர்ந்த அமைச்சர் இயோ பீ யின்னை (ஆற்றல், தொழில்நுட்பம், அறிவியல், பருவநிலை, சுற்றுச் சூழல் அமைச்சர்) திருமணம் புரிந்தார்.