கோலாலம்பூர்: அம்பாங் கைகலப்பு விசாரணைக்கு உதவுவதற்காக கோலாலம்பூரில் உள்ள அம்பாங் மாவட்ட காவல் துறை தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சரணடைந்த பார்ஹாஷ் வாஃபா சால்வடார் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறை தலைமை மூத்த ஆணையர் பாட்ஸில் அகமட் கூறுகையில், பார்ஹாஷ், விசாரணைக்கு காவல் துறையினருக்கு ஒத்துழைத்ததாகத் தெரிவித்தார்.
“சம்பந்தப்பட்ட நபர் மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட சிறுநீர் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, எந்தவொரு போதை மருந்தும் அவர் பயன்படுத்தவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. மாலை 5 மணியளவில் காவல் துறையின் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு அரசு வழக்கறிஞரிடம் பரிந்துரைக்கப்படும் என்று பாட்ஸில் கூறினார்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதியன்று அம்பாங்கில் உள்ள ஒரு விளையாட்டு வளாகத்திற்கு வெளியே பார்ஹாஷ் மற்றும் பலர் தன்னைத் தாக்கியதாக நபர் ஒருவர் கூறியிருந்தார்.
இந்த சம்பவத்தில், புகார்தாரர் தனது நண்பர்கள் மூன்று பேர் தாக்குதலை நிறுத்த முயன்ற போதிலும், தலை கவசம், கத்திகள் மற்றும் நாற்காலிகளைக் கொண்டு ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார். புகார்தாரருக்கு இடுப்பில், கைகால்களில் காயங்கள் மற்றும் பிறப்புறுப்புகளுக்கு வலி இருப்பதாகக் கூறியிருந்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 22 முதல் 28 வயதுக்குட்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
புகார்தாரர் பின்னர் தனது காவல் துறை புகாரை மீட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.