அரசாங்க நிலத்தில் உணவகம் கட்டப்பட்டதால் இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கிள்ளான் நிலம் மற்றும் மாவட்ட அலுவலகம் (பிடிடி) இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“கிள்ளான் நகராட்சி மன்றம் (எம்பிகே), வடக்கு கிள்ளான் மாவட்ட காவல் தலைமையகம், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, சிலாங்கூர் நிலம் மற்றும் சுரங்க அலுவலகம் (பிடிஜிஎஸ்), தெனகா நேஷனல் பெர்ஹாட் (டிஎன்பி) மற்றும் ஆயிர் சிலாங்கூர் ஆகியவற்றுடன் இணைந்து இந்த இடிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.” என்று அது குறிப்பிட்டது.
“கடந்த ஜூலை 19-ஆம் தேதியிடப்பட்ட ஷா அலாம் உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு மாதத்திற்குள் வாதி அந்த இடத்திலுள்ள கட்டிடக் கட்டமைப்பை இடிக்க வேண்டும் என்றும், வாதி அவ்வாறு செய்யத் தவறினால், அதற்கான தக்க நடவடிக்கையை ஏற்க வேண்டியிருக்கும் என்றும் தீர்ப்பளித்தத்திருந்தது. இது தொடர்பாக, கிள்ளான் நில நிருவாகி ஆகஸ்டு 26-ஆம் தேதியன்று அந்த இடத்தை காலி செய்ய உரிமையாளருக்கு ஏழு நாள் அறிவிப்பை வெளியிட்டார்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உரிமையாளர் அவ்வாறு செய்யத் தவறியதால், அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அது மேலும் கூறியது.
இந்த உணவகம் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. கடந்த ஆகஸ்டு 2017-இல் அதிகாரிகள் இதனை இடிக்க முயன்றனர், ஆனால் பொதுமக்கள் மற்றும் பல அரசு சாரா அமைப்புகள் இந்த நடவடிக்கையை எதிர்த்ததால் குழப்பம் ஏற்பட்ட பின்னர் இரத்து செய்ய வேண்டியிருந்தது.