Home நாடு மஇகா சார்பில் மேலும் 2 கொள்கலன்கள் – கிள்ளான் மருத்துவமனைக்கு விக்னேஸ்வரன் வழங்கினார்

மஇகா சார்பில் மேலும் 2 கொள்கலன்கள் – கிள்ளான் மருத்துவமனைக்கு விக்னேஸ்வரன் வழங்கினார்

1187
0
SHARE
Ad

கிள்ளான் : கொவிட்-19 பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா பொது மருத்துவமனைக்கு ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் ம.இ.கா சார்பில் மேலும் 2 கொள்கலன்களை வழங்கியுள்ளார்.

நாடு முழுவதும் கொவிட் பாதிப்புகளின் தாக்கங்களை பொதுமக்கள் அனுபவித்து வந்தாலும், மிக அதிகமான தொற்று பரவல்களை சிலாங்கூர் மாநிலம் எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா பொது மருத்துவமனை சவக்கிடங்கில் நல்லுடல்களை வைப்பதற்காக ஏற்பட்டுள்ள இடப் பற்றாக்குறையை சமாளிக்க விக்னேஸ்வரன் ஏற்கெனவே ஒரு கொள்கலனை வழங்கிய நிலையில் தற்போது மேலும் இரண்டு கொள்கலன்களை வழங்கியுள்ளார்.

சிலாங்கூர் மாநிலத்திலேயே மிக அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட கிள்ளான் வட்டாரம் அதிகமாகப் பாதிக்கப்பட்ட வட்டாரங்களில் ஒன்றாகும்.
கணிசமான இந்தியர்கள் வசிக்கும் வட்டாரமாகவும் கிள்ளான் வட்டாரம் திகழ்கிறது.

#TamilSchoolmychoice

இந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டு, இந்த வட்டாரத்தில் இயங்கும் துங்கு அம்புவான் ரஹிமா பொது மருத்துவமனைக்கு இதுவரை மொத்தம் 3 கொள்கலன்கள் மஇகா சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

கிள்ளான் மருத்துவமனையில் கொவிட் பாதிப்புகளால் நேரும் மரணங்களைத் தொடர்ந்து இறந்தவர்களின் நல்லுடல்களை வைப்பதற்கு அங்குள்ள சவக்கிடங்கு போதிய வசதிகளைக் கொண்டிருக்கவில்லை என்பதால் அந்த மருத்துவனைக்கு கொள்கலன் அத்தியாவசியாகத் தேவைப்படுகிறது என்பதை அறிந்து டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மேலும் இரு கொள்கலன்களை மஇகா சார்பில் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொள்கலன்கள் மூலம் கிள்ளான் மருத்துவமனை எதிர்நோக்கும் சிரமங்களை சமாளிக்க முடியும் எனத் தான் கருதுவதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார். சுகாதார அமைச்சருடன் தொடர்பு கொண்டு, தான் இந்தக் கொள்கலனை வழங்குவதற்கு அனுமதி பெற்ற பின்னரே இதனை வழங்குவதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். கொள்கலன் வழங்கியது குறித்து கருத்துரைத்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் “கிள்ளான் மருத்துவமனைக்கு நான் இந்த அன்பளிப்பை வழங்கியதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நான் இந்த வட்டாரத்திலேயே பிறந்து வளர்ந்தவன். இந்த மக்களோடு மக்களாக பழகி வளர்ந்தவன். எனது தந்தையாரின் அரசியல் பயணமும் இந்த வட்டாரத்தில்தான் தொடங்கியது. எனது அரசியல் பயணமும் இதே கிள்ளான் வட்டாரத்தில் இருந்துதான் இன்றுவரை தொடர்கின்றது.  கிள்ளான் மஇகா தொகுதியின் தலைவராகவும் நான் சேவையாற்றியுள்ளேன். இப்படி பல வகைகளிலும் என் மனதுக்கும் வாழ்க்கைக்கும் நெருக்கமான கிள்ளான் வட்டார மக்களுக்கும், அவர்கள் பயன்படுத்தும் பொதுமருத்துவமனையின் தேவைக்கும் என்னால் இயன்ற இந்த அன்பளிப்பை வழங்கியதில் மனநிறைவு கொள்கிறேன்” என்று கூறினார்.

எனினும் கொவிட்டுக்கு எதிரான போராட்டம் இன்னும் ஓயவில்லை, நாம் அனைவரும் இணைந்து அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருவதோடு, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையையும் பின்பற்றி கொவிட் பரவலை கட்டுப்படுத்தப் பாடுபடுவோம் என்றும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.