ரோம்: இத்தாலியில் ஒரே நாளில் நேற்று வெள்ளிக்கிழமை, கொவிட்-19 இறப்புகள் 627 பேரை எட்டியுள்ளது. இது அந்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும்.
இதற்கிடையில், மேலும் 5,986 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இந்த நோய்க்கான நேர்மறையான சம்பவங்களின் மொத்த எண்ணிக்கையை 47,021- ஆகக் கொண்டு வந்துள்ளது.
ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 4,032 ஆகும். இது சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.
இத்தாலிய பொதுப் பாதுகாப்புத் துறையின் தலைவரும், கமிஷனருமான ஏஞ்சலோ பொரெல்லி கருத்துப்படி, பெரும்பாலான இறப்புகளில் வயதானவர்கள் அல்லது இதய நோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பிற நோய்கள் உள்ள நோயாளிகளே அதிகம் என்று தெரிவித்தார்.
ஏப்ரல் 3 வரை முழு நாடும் ஊரடங்கு உத்தரவின் கீழ் இருந்தாலும், இத்தாலிய அரசாங்கத்திடமிருந்து இன்னும் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் கடுமையான விதிமுறைகளை பலர் எதிர்பார்க்கிறார்கள்.
சீனாவின் ஹூபேயில் இந்நோய் சம்பந்தமான பதிவுகள் குறைந்து வருவதைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பாவை கொவிட்-19 நோய்க்கான புதிய மையமாக அறிவித்தது.