மும்பை – எதிர்வரும் மே 4-ஆம் தேதி முதல் இந்தியாவுக்கான விமான சேவைகளைத் தொடங்கவிருப்பதாக ஏர் ஆசியா அறிவித்திருக்கும் நிலையில் இந்தியாவுக்கான விமானப் பயணங்கள் தொடர்பில் அரசாங்கம் இறுதி முடிவு எடுக்கப்படும் வரையில் விமானப் பயணங்களுக்கான சீட்டுகளை முன்கூட்டியே விற்க வேண்டாம் என இந்தியா அறிவித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் பயணங்களுக்கான பயணங்களைத் தொடர்வது குறித்து இதுவரையில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் இந்தியாவின் வான்போக்குவரத்து அமைச்சர் ஹர்டிப் சிங் புரி (படம்) தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 18) தெரிவித்தார்.
மலேசியாவுக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீட்டிக்கப்படுமா என்பது தெரியவில்லை.
இந்தியாவுக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மே 3 வரை நீடிக்கிறது.
விமானப் பயணங்களுக்கான முடிவு இதுவரை எடுக்கப்படாத நிலையில் ஏர் ஆசியா தனது விமானப் பயணங்களுக்கான பயணச் சீட்டுகளை இணையம் வழி விற்பனை செய்யப் போவதாக அறிவித்தது.
தனது பயணங்களுக்காக ஏற்கனவே கட்டணம் செலுத்தியவர்கள், தங்களின் பயணங்கள் இரத்து செய்யப்பட்டிருந்தால் அதற்குரிய தொகைக்கு ஈடாக மற்ற பயணங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம் என ஏர் ஆசியா அறிவித்திருக்கிறது.
ஆனால், அவ்வாறு செய்யமுடியாது என்றும், இரத்து செய்யப்பட்ட பயணங்களுக்கான கட்டணத் தொகையை விமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரொக்கமாகத் திரும்பச் செலுத்த வேண்டும் என்றும் இந்திய அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது.