புதுடில்லி : 234 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-ஜேடியு கூட்டணி இணைந்து 202 தொகுதிகளில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
அவருக்கு மீண்டும் முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா, அல்லது பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராவாரா என்ற ஆரூடங்கள் நிலவிய நிலையில் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராகியுள்ளார்.
பீகார் தேர்தலில் பாஜகவும் நிதிஷ்குமாரின் தலைமையிலான ஜேடியு என்னும் ஜனதா தளம் யுனைடெட் கட்சியும் கூட்டணி அமைத்து தலா 101 தொகுதிகளில் சரிசமமாகப் போட்டியிட்டன.
202 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியிருக்கிறது இந்தக் கூட்டணி. 35 தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் இணைந்த மகாகத்பந்தன் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. எஞ்சிய 7 தொகுதிகளை மற்ற கட்சிகள் கைப்பற்றியிருக்கின்றன.
போட்டியிட்ட தலா 101 தொகுதிகளில் பாஜக 89 தொகுதிகளிலும், ஜேடியு 85 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. கணக்குப்படி பாஜக, ஜேடியு கட்சியை விடக் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
பீகாரில் பாஜக பின்பற்றிய 3 முக்கிய அம்சங்கள் இந்த மாபெரும் வெற்றிக்குத் துணிபுரிந்தன என்பது அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு. முதலாவது இளைஞர்களையும் பெண்களையும் குறிவைத்து அறிவிக்கப்பட்டத் திட்டங்கள்.
இரண்டாவது அம்சம், பெண்களுக்கு சுய வணிகத் திட்டங்களுக்காக, அவர்களின் வங்கிக் கணக்குகளில் தலா 10 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. பெண்களின் வாக்குகளையும், அவர்கள் சார்ந்த குடும்ப உறுப்பினர்களின் வாக்குகளையும் இந்த நடவடிக்கைகள் பெருமளவில் ஈர்த்திருக்கின்றன.
வெற்றி தந்திருக்கும் மூன்றாவது அம்சமாகக் கருதப்படுவது மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணி என்பதால் இரட்டை இயந்திர அரசாங்க வளர்ச்சித் திட்டங்கள் என்னும் அணுகுமுறையில் பீகார் மாநிலம் கூடுதல் பலன்களைப் பெறும் என்ற பரப்புரையாகும். மத்தியில் ஆளும் பாஜக – மாநிலத்தை ஆளும் ஜேடியு – இரண்டும் ஒரே கூட்டணியாக இணைந்திருப்பதால் – இந்த இரட்டை இயந்திர அரசாங்கங்கள் (Double Engine growth) மூலம் வளர்ச்சிகள் மேலோங்கும் என்ற பரப்புரை முன்னிலைப்படுத்தப்பட்டது.
வாக்குகள் திருடப்பட்டன, எஸ்ஐஆர் என்ற பெயரில் ஆதரவு வாக்குகளை தேர்தல் ஆணையம் அழித்து விட்டது, என – தோல்விக்கான காரணங்களை அடுக்கினாலும், எதிர்க்கட்சிகள் பாஜகவின் வலிமையை குறைத்தே மதிப்பிடுகின்றன என்பதும் – பாஜகவுக்கு இணையாக, வெறித்தனமுடன் எதிர்க்கட்சிகள் செயல்படுவதில்லை – என்பதும்தான் பாஜகவின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னணியில் இருக்கும் உண்மையான காரணங்கள்.
இதே போன்ற வியூகங்களுடன் தமிழ் நாட்டையும் குறிவைத்து இனி பாஜக, அதிமுகவுடன் இணைந்து களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




