Home Photo News இந்தியப் பொதுத் தேர்தல் : மாநில உணர்வுகளுக்கு முதன்மை கொடுத்த மக்கள்!

இந்தியப் பொதுத் தேர்தல் : மாநில உணர்வுகளுக்கு முதன்மை கொடுத்த மக்கள்!

224
0
SHARE
Ad
நரேந்திர மோடி-சந்திரபாபு நாயுடு-நிதிஷ் குமார்

இந்தியப் பொதுத் தேர்தல் முடிவடைந்து பிரதமரும் புதிய அமைச்சரவையும் பதவியேற்று விட்டாலும் தேர்தல் முடிவுகள் குறித்த விளக்கங்கள், விவாதங்கள் தொடர்கின்றன.

இந்த முறை அரசியல் பார்வையாளர்கள் வைக்கும் முக்கியமான பார்வை நாடு தழுவிய அளவில் தேசியக் கட்சிகள் என முக்கியத்துவம் தராமல் மாநில உணர்வுகளால் ஈர்க்கப்பட்டு பெரும்பாலான மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதாகும்.

பாஜகவின் மோடி-அமித் ஷா அரசாங்கம் மேற்கொண்ட பல திட்டங்கள் மாநில கட்சிகளின் கொள்கைகளுக்கு எதிராக அமைந்தன. தமிழ் நாட்டின் அதிமுக, பாஜக கூட்டணியிலிருந்து வெளியானதற்கும் அது ஒரு காரணம்.

#TamilSchoolmychoice

மாநில ரீதியில், வாக்காளர்களும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல் – ஒரே மொழி-இந்திய அரசியல் சாசனத்தில் திருத்தங்கள்’ என்பது போன்ற மோடி-அமித் ஷா முழக்கங்களை ரசிக்கவில்லை.

விளைவு? மாநில உரிமைகளுக்குப் போராடும் கட்சிகளுக்கும் மாநில உணர்வுகளை தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைத்த கட்சிகளுக்கும் மக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

தமிழ்நாடு – மேற்கு வங்காளம் – ஒடிசா – முன்னுதாரணங்கள்

விடைபெற்றுச் செல்லும் முந்தைய மோடி அமைச்சரவை உறுப்பினர்களுக்கு அதிபர் அளித்த விருந்தில்…

உதாரணம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகியவை! தமிழ் நாடு சொல்லத் தேவையில்லை. 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.

42 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காளத்தில் பாஜக பெரும்பான்மை பெறும் என கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் 29 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜகவை மண்ணைக் கவ்வ வைத்தது மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ். 12 தொகுதிகளை மட்டுமே பாஜக பெற முடிந்தது.

இதே மாநில உணர்வுகளின் அடிப்படையில்தான் ஒடிசா மாநிலத்தையும் பாஜக கைப்பற்ற முடிந்தது என்பதையும் கவனிக்க வேண்டும். தமிழ் நாட்டுக்காரரான வி.கே.பாண்டியன், நவீன் பட்நாயக்கிற்குப் பின்னர் ஒடிசாவின் அடுத்த முதலமைச்சர் ஆவார் – ஒடிசா மாநிலத்திற்கு தமிழர் ஒருவர் முதலமைச்சர் ஆவதா?- என்பது போன்ற பாஜக பிரச்சாரங்களால்தான் அந்த மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியையும் கைப்பற்றியிருக்கிறது.

25 ஆண்டுகாலமாக சிறந்த முதலமைச்சராக பாராட்டுகளோடு செயல்பட்டும் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் தோல்வி கண்டதும் இதே மாநில சார்பு உணர்வுகளால், வாக்காளர்கள் அவருக்கு எதிராகத் திரும்பியதால்தான்!

80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில், பாஜக ஆட்சி நடந்தாலும் அகிலேஷ் யாதவ்வின் மாநிலக் கட்சியான சமஜ்வாடி பார்ட்டி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 33 தொகுதிகளில் மட்டுமே பெற்றது. சமஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் 6 தொகுதிகளைக் கைப்பற்றியது.

மாநில அளவில் வாக்காளர்கள் தங்களின் உரிமைகளுக்குப் போராடும் கட்சிகளை நோக்கித் தங்களின் ஆதரவை திசை திருப்பியதால்தான் பாஜகவுக்கு இந்த முறை தோல்வி முகம்! அதாவது தனித்துப் பெரும்பான்மை பெற இயலாத சூழல்!

தோல்வி கண்ட இந்துத்துவா அரசியல்!

அயோத்தியாவில் நிர்மாணிக்கப்பட்ட ராமர் ஆலயத்தின் திருவுருவச் சிலை

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு சிறந்த உதாரணம் பாஜக முன்னெடுத்த இந்துத்துவா அரசியல். பாஜக, இந்து மதத்திற்கும், தங்களுக்கும் ஒரு பாதுகாவலனாகத் திகழும் என இந்துக்கள் நம்பியதால்தான் கடந்த 2 பொதுத் தேர்தல்களிலும் பாஜக தனித்துப் பெரும்பான்மை பெறும் அளவுக்கு அவர்களுக்கு வாக்களித்தார்கள்.

ஆனால், அந்த இந்துத்துவா அரசியல் என்பது முஸ்லீம்களுக்கு எதிரான அடக்குமுறை-அழுத்தங்கள் – என்பது போன்ற முழக்கங்கள் எழுந்தபோது – அதுவும் மோடியின் வாய்மொழியாகவே வெளிவந்தபோது – நடுநிலை இந்துக்களே அதனை இரசிக்கவில்லை. அயோத்தியா ராமர் ஆலயம் என்பது பல இந்து இயக்கங்கள், தனிநபர்களின் போராட்டத்தால் – இந்து, முஸ்லீம் என இருதரப்புகளின் உயிர்ப்பலியால் – உருவான ஆலயம். மோடி தனியாக சென்று அந்த ஆலயத்தின் சடங்குகளை நடத்தியதை இந்துக்களே ஆதரிக்கவில்லை. அதன் பிரதிபலிப்புதான் – அயோத்தி ராமர் ஆலயம் அமைந்திருக்கும் பைசாபாத் நாடாளுமன்றத் தொகுதியிலேயே பாஜக தோல்வியைத் தழுவி, சமஜ்வாடி கட்சி வெற்றி பெற்றிருக்கும் அதிசயம்!

மோகன் பகவத் -ஆர்எஸ்எஸ் தலைவர்

இதே கருத்தைத்தான் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் பொதுத் தேர்தல் முடிவடைந்ததும் ஆர்எஸ்எஸ் இயக்க சேவகர்களிடையே ஆற்றிய உரையின்போது தெரிவித்திருக்கிறார். நேரடியாக அவர் மோடியைச் சுட்டிக் காட்டாவிட்டாலும், அவரின் இந்தி மொழியிலான உரை தனிமனிதப் புகழ்பாடலுக்கு எதிரானதாக அமைந்திருக்கிறது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி

இந்தியத் தேர்தல் முடிவுகளை முழுமையாகப் பார்க்கும்போது இந்திய ஜனநாயகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகவே அது பார்க்கப்படுகிறது.

கிறிஸ்துவ, முஸ்லீம் மற்றும் சிறுபான்மை இனத்தவர்களை முற்றாக புறக்கணித்து விட்டு அரசியல் நடத்த முடியாது – இந்துத்துவா அரசியல் ஓரளவுக்குத்தான் பயன்படும் – அதுவே வெற்றிக்கான உத்தரவாதம் இல்லை – மொழி வாரி மாநிலங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் – என பல செய்திகளை பொதுத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியிருக்கின்றன.

பாஜக, வட இந்தியாவில் பெரும்பான்மையான 240 தொகுதிகளைத் தனித்து வென்றாலும் ஒரு தென்னிந்திந்திய மாநிலத்தின் 17 தொகுதிகளைக் கொண்டிருக்கும் ஒரு நாயுடுகாருவின் தயவோடுதான் – பீகார் மாநிலத்தின் 13 தொகுதிகளைக் கொண்ட நிதிஷ்குமாருடன் இணைந்துதான் – ஆட்சி அமைக்க முடியும் – என்ற நிலைமையையும் பாஜகவுக்கு பொதுத் தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டியிருக்கின்றன.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மாநிலத்துக்குத் தேவை பிரச்சனைகளுக்கான தீர்வுகள், தமிழ்மொழியின் பெருமைகளை மட்டும் புகழ்ந்து பாடும் போலி உரைகளல்ல – தனிமனித துதிகள், மோடி காரண்டி என்பதெல்லாம் வாக்குப் பெட்டியின் முன் எடுபடாது – என்பது போன்ற பல அரசியல் செய்திகளை பாஜகவுக்கு மட்டுமின்றி மற்ற கட்சிகளுக்கும் தமிழ் நாட்டு தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன.

இன்னும் 5 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி தாக்குப் பிடிக்குமா? என்பதும் கேள்விக் குறிதான்! ஆனால், பாஜக வியூகவாதிகளையோ, மோடி-அமித் ஷா கூட்டணியையோ குறைத்து மதிப்பிட முடியாது. புதிய வியூகங்கள் இனி வகுக்கப்படும். புதிய அணுகுமுறைகள் இனி கையாளப்படும்.

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாருக்கும் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. இருவரும் இணைந்து கரங்கோத்து முடிவெடுத்தால்தான் பாஜக – மோடி – ஆட்சியைக் கவிழ்க்க முடியும். எனவே அவர்கள் அத்தகைய முடிவை எதிர்காலத்தில் ஒருமித்து எடுப்பார்களா என்பது சந்தேகம்தான்!

அப்படியே இருவரும் இணைந்தாலும் அவர்களை ஏற்றுக் கொண்டு மாற்று ஆட்சி அமைக்கும் சக்தியை காங்கிரஸ் கொண்டுள்ளதா என்பது ஐயப்பாடுதான்! அதற்குள்ளாக இந்தியா கூட்டணி சிதறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எனவே, ஆட்சி நமதாகி விட்டதால், இருக்கும் வரை நமக்காகவும், நமது மாநிலத்துக்காகவும் இயன்றதைச் சாதிப்போம் என்ற புத்திசாலித்தனமான முடிவைத்தான் சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ்குமாரும் எடுப்பார்கள் என நம்பலாம்.

அடுத்த பொதுத் தேர்தலில் பாஜக அடிபட்ட புலியாக மீண்டும் வீறு கொண்டு எழுமா? அல்லது அதன் சகாப்தம் மோடியோடு முடிவுக்கு வருமா?

-இரா.முத்தரசன்