Home இந்தியா இந்தியத் தேர்தல் இறுதி முடிவுகள்: பாஜக கூட்டணி 292 – காங்கிரஸ் கூட்டணி 234 –...

இந்தியத் தேர்தல் இறுதி முடிவுகள்: பாஜக கூட்டணி 292 – காங்கிரஸ் கூட்டணி 234 – மற்றவை 17

532
0
SHARE
Ad

புதுடில்லி : இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன.

மொத்தமுள்ள தொகுதிகளில் பாஜக கூட்டணி 291 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக தனித்து நின்று 240 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் தனித்து ஆட்சியை அமைக்கும் பெரும்பான்மையை பாஜக பெற முடியவில்லை.

காங்கிரஸ் கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. தனித்த கட்சியாக காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியாக பாஜகவும், காங்கிரசும் திகழ்கின்றன.

#TamilSchoolmychoice

மற்ற கட்சிகள் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. இந்தக் கட்சிகள் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தாலும் (234+17) 251 தொகுதிகளின் பலம் மட்டுமே காங்கிரசுக்கு கிடைக்கும். ஆட்சி அமைக்க முடியாது.

எனவே, அடுத்து ஆட்சி அமைப்பது யார் என்ற பரபரப்பு புதுடில்லியின் பரவத் தொடங்கியுள்ளது. இன்று புதன்கிழமை (ஜூன் 5) காலை 11.30 மணியளவில் பாஜக மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. புதிய பிரதமரும் அமைச்சர்களும் நியமிக்கப்படும் வகையில் நடப்பு அமைச்சரவை ராஜினாமா செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதற்கிடையில் இந்தியா கூட்டணி தலைவர்களின் சந்திப்பும் இன்று புதன்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று காலை புதுடில்லி புறப்படுகிறார். அடுத்த மத்திய அரசாங்கத்தை அமைக்க ந்தியா கூட்டணி முயற்சி செய்கிறது என்ற அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் பாஜக கூட்டணி தலைவர்களின் சந்திப்பும் இன்று நடைபெறுகிறது.

இன்று ஜூன் 5 முதல் அடுத்த 4 நாட்களுக்கு இந்திய அதிபரின் மாளிகையான ராஷ்டிரபதி பவன் மூடப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையின் பதவி ஏற்கும் சடங்குகளின் ஏற்பாடுகளுக்காக அதிபர் மாளிகை மூடப்படுவதாகக் கருதப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட செவ்வாய்க்கிழமை இரவு (ஜூன் 4) புதுடில்லி பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான கூட்டத்திற்கு வருகை தந்து மோடி உரையாற்றினார்.

3-வது முறையாக மோடியே பிரதமராகும் அதிகாரத்தை மக்கள் என்டிஏ என்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வழங்கியிருக்கிறார்கள் என பாஜக தலைவர்கள் முழங்கியிருக்கின்றனர்.