கோலாலம்பூர், ஜூன் 11 – பேராக் மாநில அரசாங்கத்தில் ம.இ.கா விற்கு வழங்கப்படும் இடங்கள் குறித்து அக்கட்சி வட்டாரங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
குறிப்பாக பேரா மாநில சபாநாயகர் பதவிக்கு ம.இ.கா வைச் சேர்ந்தவர்கள் தான் நியமிக்கப்படவேண்டும். இல்லை என்றால் அரசாங்கப் பதவிகளைப் புறக்கணிப்போம் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அறிக்கை விடுத்த போதும், ம.இ.கா வியூக இயக்குனர் வேள்பாரி மற்றும் சிலர் பழனிவேலின் முடிவுக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால் அக்கட்சி வட்டாரங்களில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இந்நிலையில் பேரா மாநில மந்திரி பெசார் ஸம்ரி, பதவி நியமனத்தில் பழனிவேல் மிரட்டுவதையும், நெருக்குதல் கொடுப்பதையும் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் பதவி நியமனத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி
பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகர் பதவி ம.இ.கா வைச் சேர்ந்த ஒருவருக்குத் தான் வழங்கப்படும் என்று பொதுத்தேர்தலுக்கு முன் தங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது அம்னோவைச் சேர்ந்த ஒருவருக்கு அப்பதவியை வழங்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது என்றும் ம.இ.கா தேசியத் தலைவர் பழனிவேல் கடந்த சனிக்கிழமை அறிக்கை விடுத்தார்.
அதோடு ம.இ.கா வைச் சேர்ந்தவருக்கு அப்பதவி மறுக்கப்படும் பட்சத்தில், பேரா மாநிலத்தில் எந்த ஒரு அரசாங்கப் பதவிகளையும் தாங்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்றும் பழனிவேல் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 12 ஆவது பொதுத்தேர்தலில் எதிர்கட்சியினர் பேரா மாநிலத்தில் ஆட்சியமைத்த போது ஜசெக வைச் சேர்ந்த வி.சிவக்குமாருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது. அதே போல் இப்போது தேசிய முன்னணி ஆட்சியில் ம.இ.கா வைச் சேர்ந்த ஆர். கணேசனுக்குத் தான் அப்பதவி வழங்கப்படவேண்டும் என்று ம.இ.கா சார்பாக கோரிக்கைகள் பல விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பதவி நியமனம் விஷயத்தில் பழனிவேல் மிரட்ட வேண்டாம்
“பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகர் பதவி ம.இ.கா வைச் சேர்ந்தவருக்குத் தருவதாக நான் வாக்குறுதி அளிக்கவில்லை. எனவே, இவ்விவகாரம் தொடர்பாக பழனிவேல் மிரட்டல் விடுக்கக் கூடாது” என்று அம்மாநில மந்திரி பெசார் ஸம்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் பழனிவேல் விடுத்துள்ள அறிக்கை தன்னையும், மாநில தேசிய முன்னணி அரசையும் மிரட்டும் நோக்கத்தில் உள்ளதாகவும் ஸம்ரி தெரிவித்துள்ளார்.
அதோடு “சட்டமன்றம் இன்னும் கூட்டப்படவில்லை. எனவே பதவி நியமனம் பற்றி எனது விருப்பத்தின் பேரில் அறிவிக்க முடியாது.சட்டமன்றம் கூட்டப்படும் தறுவாயில் தான் அடுத்த சபாநாயகர் யார் என்பதை அறிவிக்க முடியும்.
எனது பங்கிற்கு சிறப்பு அதிகாரி மற்றும் இந்திய சமூகத்திற்கான ஆலோசகர் ஆகிய பதவிகளுக்கு பொருத்தமானவர்களை ஏற்கனவே தேர்ந்தெடுத்து மாநில செயலாளரிடம் கொடுத்துவிட்டேன்.
இந்நிலையில் பழனிவேல் ஏன் இப்படி ஒரு சர்ச்சையை ஏற்படுத்துகிறார் என்று தெரியவில்லை. நானும் பழனிவேலும் சந்தித்துப் பேசிக்கொண்ட போதெல்லாம் பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதித்திருக்கிறோம். அப்போழுதெல்லாம் அவர் இப்பிரச்சனையைப் பற்றி பேசவே இல்லை. எனவே பழனிவேல் அவரது கோரிக்கைகளை என்னிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம் அதை விடுத்து மிரட்டல் விடுக்கக்கூடாது ” என்று ஸம்ரி நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
நாங்கள் மிரட்டவில்லை. புரிந்துணர்வு அடிப்படையில் தான் பதவியைக் கேட்கிறோம்
தேசிய முன்னணியில் சகோதரத்துவத்தின் அடிப்படையில் தான் சபாநாயகர் பதவி கேட்கிறோம். அதை பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினர் சங்கத் தலைவர் முகம்மட் கூசய்ரி அப்துல் தாலிப் மற்றும் மந்திரி பெசார் ஸம்ரி போன்றோர் மிரட்டலாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று ம.இ.கா தலைமைச் செயலாளர் சக்திவேல் அழகப்பன் தெரிவித்துள்ளார்.
மேலும் “வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கூறுவது தேசிய முன்னணியின் தேர்தல் வாக்குறுதி மட்டுமல்ல, அரசியல் கொள்கைகளையும் சேர்த்து தான். அதனை அடிப்படையாக வைத்தே 13 ஆவது பொதுத்தேர்தலில் பேரா மாநிலத்தில் இந்திய மக்களின் வாக்குகளை ம.இ.கா பெற்றுத் தந்தது.
அத்துடன் தேசிய முன்னணியின் கூட்டணிக்கட்சிகளுடன் உள்ள புரிந்துணர்வு அடிப்படையில் தான் 13 ஆவது பொதுத்தேர்தலில் ம.இ.கா பேராங் சட்டமன்றத்தை அம்னோவிற்கு விட்டுக் கொடுத்ததோடு, பாசீர் பாஞ்சோங் சட்டமன்றத்தை, ஜெலாப்பாங் சட்டமன்றத்தோடு மாற்றிக் கொண்டது. இதனால் பேராங் மற்றும் பாசீர் பாஞ்சோங்கில் அம்னோ வெற்றி பெற்றது.
எனவே பேரா மாநில சட்டமன்ற சபாநாயகர் பதவியை ம.இ.கா கோருவது நியாயமான எதிர்பார்ப்பு மற்றும் உரிமையும் ஆகும். இப்பிரச்சனைக்கு மாநில தேசிய முன்னணி ஒரு சுமூகத் தீர்வு காணும் என்று நான் நம்புகிறேன்” சக்திவேல் தெரிவித்துள்ளார்.
ம.இ.கா ஒன்றும் ம.சீ.ச போல் பணக்கார கட்சி அல்ல
ம.இ.காவிற்கு சபாநாயகர் பதவி வழங்கவில்லை என்றால் அரசாங்கப் பதவிகள் எதையும் ம.இ.கா ஏற்கப்போவதில்லை என்று ம.சீ.ச பாணியில் அறிக்கை விடுத்த பழனிவேலின் முடிவு குறித்து அக்கட்சியின் வியூக இயக்குனரான சா.வேள்பாரி பதிலடி கொடுத்துள்ளார்.
“பதவியைப் புறக்கணிக்க ம.இ.கா ஒன்றும் ம.சீ.ச போல் பணக்கார கட்சிஅல்ல. சீன சமூகம் பொருளாதாரத்தில் நன்கு வளர்ச்சியடைந்திருப்பதோடு, அதற்கு உதவப் பல அரசு சார்பற்ற இயக்கங்களும் உள்ளன. அதனால் தான் ம.சீ.ச துணிச்சலாக அப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது. ஆனால் பொருளாதார நிலையில் பின் தங்கியிருக்கும் ம.இ.காவால் அவசரப்பட்டு அப்படி ஒரு முடிவை எடுத்துவிட முடியாது.
அதோடு சட்டமன்ற தலைவர் பதவியால் சமூகத்திற்கு எந்த விதமான நன்மையும் கிடையாது. அப்பதவியில் இருப்பவருக்கு மட்டுமே நன்மை கிடைக்கும். எனவே சட்டமன்ற தலைவர் பதவியைக் காரணம் காட்டி மஇகா தலைவர்களுக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் மற்றும் நம் இந்திய சமூகத்திற்கும் கிடைக்கும் நன்மைகளை கிடைக்காமல் செய்துவிடக்கூடாது” என்று வேள்பாரி தெரிவித்துள்ளார்.
மத்திய செயலவைக் கூட்டத்தில் விவாதிப்போம்
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ம.இ.கா கட்சியின் தேசிய உதவித் தலைவரான டத்தோ எம்.சரவணன், “ இப்பதவி நியமனம் பற்றி எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து மத்திய செயலவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதன் பிறகு எடுக்கப்படும் எந்த ஒரு முடிவையும் நாங்கள் ஏற்கத் தயார். ம.இ.கா சம்பந்தமான எந்த ஒரு விவகாரத்தையும் மத்திய செயலவைக் கூட்டத்தில் விவாதித்த பின்னரே முடிவெடுப்போம் அதன்படி இப்பிரச்சனைக்கும் ஒரு சுமூக முடிவு எடுக்கப்படும்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.