Home நாடு மஇகா செனட்டர்களாக சோதிநாதன், பேராக் கணேசன், விக்னேஸ்வரன் நியமனமா?

மஇகா செனட்டர்களாக சோதிநாதன், பேராக் கணேசன், விக்னேஸ்வரன் நியமனமா?

1694
0
SHARE
Ad

Sothinathanகோலாலம்பூர், ஜூன் 19 – எதிர்வரும் ஜூன் 23 -ம் தேதி, ம.இ.கா -வை பிரதிநிதித்து செனட்டர்களாகப் பதவி ஏற்கப் போகும் மூன்று ம.இ.கா பிரமுகர்கள்  யார் என கடந்த சில நாட்களாக அக்கட்சி வட்டாரங்களில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், செனட்டர்களாக பதவி ஏற்கப் போகும் அந்த மூன்று பேர் டத்தோ சோதிநாதன், டத்தோ ஆர். கணேசன் மற்றும் டத்தோ எஸ்.ஏ விக்னேஸ்வரன் என ம.இ.கா வட்டாரங்கள் இன்று தெரிவித்தன.

நெகிரி செம்பிலான் மஇகாவின் நடப்பு மாநிலத் தலைவரான டத்தோ சோதிநாதன், கடந்த ஆண்டு நடைபெற்ற மஇகா தேர்தலில் தேசிய உதவித்தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு முதலாவதாக வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

மேலும், சோதிநாதன் இதற்கு முன் தெலுக் கெமாங் தொகுதியின்  நாடாளுமன்ற உறுப்பினராகவும், துணையமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அதோடு, முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சாமிவேலுவின் அரசியல் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மஇகாவின் முன்னாள் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவரான விக்னேஸ்வரன், கோத்தா ராஜா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 2004 முதல் 2008 வரையில் பதவி வகித்தார். அதே கால கட்டத்தில்  நாடாளுமன்ற செயலாளராகவும் பொறுப்பில் இருந்தார்.

அதன் பின்னர், 2008 -ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், கோத்தா ராஜா தொகுதியில் அவர் தோல்வியுற்றார்.

மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற மஇகா தேர்தலில், தேசிய உதவித்தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட விக்னேஸ்வரன் தோல்வியைத் தழுவினார்.R.Ganesan

பேராக் மாநில நடப்பு மஇகா தலைவரான டத்தோ ஆர்.கணேசன் ஒரு வழக்கறிஞராவார்.

அதே வேளையில் பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், சபாநாயகராகவும் பதவி வகித்தவர்.

இந்நிலையில், கணேசனுக்கு வழங்கவிருக்கும் செனட்டர் பதவி, ஏற்கனவே மஇகா வைத்திருந்த ஒன்றா அல்லது 13 வது பொதுத்தேர்தலில் பேராக் மந்திரி பெசார் மஇகாவிற்கு அளித்திருந்த வாக்குறுதிப்படி புதிதாக உருவாக்கப்படும் ஒன்றா என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை.

கடந்த 13 வது பொதுத் தேர்தலின் போது, ம.இ.காவின் சட்டமன்ற தொகுதி ஒன்றை அம்னோவிற்கு  விட்டுக் கொடுத்ததற்கு பதிலாக மஇகாவுக்கு மற்றொரு செனட்டர் பதவி ஒதுக்கப்படும் என தேசிய முன்னணி தலைமைத்துவம் வாக்குறுதி அளித்தது.

ஆனால், அரசியல் ஈதியாக இது ம.இ.காவுக்கு நன்மை பயக்கும் முடிவல்ல என்ற குறை கூறல்கள் அப்போதே பரவலாக எழுந்தன.

அதற்கேற்ப, விட்டுக் கொடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு பதிலாக ம.இ.காவுக்கு வழங்கப்படும் என வாக்குறுதி தரப்பட்ட செனட்டர் பதவி இதுவரை வழங்கப்படவில்லை.

ம.இ.காவுக்கு இழந்து விட்ட அரசியல் உரிமைகளில் ஒன்றாக பேராக் மாநிலத்தின் சட்டமன்றத் தொகுதி கருதப்படுகின்றது. முன்பு நான்கு தொகுதிகளைக் கொண்டிருந்த ம.இ.கா கடந்த 13வது பொதுத் தேர்தலில் மூன்று தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. ஆனால் அந்த மூன்று தொகுதிகளிலும் தோல்வியையே கண்டது.

S.A.Vigneswaran.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக பழனிவேல்

கடந்த சில காலங்களாக, விக்னேஸ்வரனுக்கும் கட்சியின் தேசியத் தலைவர் பழனிவேலுவுக்கும் இடையில் நிலவி வந்த பனிப்போர் இந்த புதிய செனட்டர் நியமனத்தின் மூலம் ஒரு முடிவுக்கு வருவதாக ம.இ.கா அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

காரணம், கடந்த ஆண்டு நடைபெற்ற மஇகா தேர்தலில், கட்சியின் 3 தேசிய உதவித்தலைவர் பதவிகளில் விக்னேஸ்வரன் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் பழனிவேல் அவருக்கு நேரடியாகவே ஆதரவு தெரிவித்தார்.

எனினும், விக்னேஸ்வரன் தோல்வியைத் தழுவியதோடு, தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி சங்கங்களின் பதிவிலாகாவில் புகார் அளித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மஇகா தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி பதிவிலாகாவில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. அந்த விவகாரத்தில் பதிவிலாகாவின் முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விக்னேஸ்வரனுக்கு செனட்டர் பதவி வழங்கப்படவுள்ளது என்பதால் அவர் இனி பழனிவேலுவின் தீவிர ஆதரவாளராக மீண்டும் மாறி தலைமைத்துவத்திற்கு ஆதரவாக செயல்படத் தொடங்குவார் என்றும் ம.இ.கா வட்டாரங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.