கோலாலம்பூர், ஜூன் 14 – நாட்டின் ஜனநாயக முறையை இழிவுபடுத்தி வரும் எதிர்கட்சியினரிடம், நஜிப் தலைமையிலான அரசாங்கம் மிகக் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
நேற்று கோலாலும்பூரில் நடைபெற்ற லங்காவி அனைத்துலகக் கலந்துரையாடல் ( Langkawi International Dialogue) விருந்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த மகாதீர், “13 வது பொதுத்தேர்தலில் வெற்றி அடைய முடியாமல் போனதால் எதிர்கட்சியினர் அரசாங்கத்தை கவிழ்க்க நினைக்கிறார்கள். முதலில் மக்களின் தேர்வை மதிப்பதாகக் கூறினார்கள் ஆனால் இப்போது ஜனநாயக முறையைப் புறக்கணித்து தெரு ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறார்கள். அவர்களின் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்னதாக விருந்தில் பேசிய மகாதீர், “தேசிய முன்னணி அரசாங்கத்தின் முறையான செயல் திட்டங்களினாலும், ஒருங்கிணைப்பினாலும் நாட்டில் பொருளாதாரம் உயர்ந்து மக்கள் மிகுந்த நன்மை அடைந்திருக்கிறார்கள்.
மேலும் பொருளாதார திட்டமிடல் (EPU) மற்றும் நடைமுறைப்படுத்துதல், ஒருங்கிணைப்பு (ICU) ஆகிய பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்ட கடும் முயற்சிகளின் காரணமாக மலேசியாவில் பொருளாதார வாய்ப்புகள் மேம்பாடு அடைந்துள்ளன.
அந்நிய நேரடி முதலீட்டை(எப்டிஐ) ஊக்குவிக்க முதலீட்டாளர்களுக்கு விடுமுறையில் வரி சலுகைகள் அளிப்பதும், உள்ளூர் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிப்பதும் அரசாங்கத்தின் வியூகங்கள் ஆகும்.அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கும் போது நாட்டில் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும், அதோடு பொருளாதாரமும் உயரும்.” என்று தெரிவித்துள்ளார்.