கோலாலம்பூர், ஆக. 20- சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளை உடனடியாக சுட்டுக் கொல்லும் அணுகுமுறையை கையாளமல் முடிந்தவரை அவர்களை பிடிப்பதற்கான நடவடிகையைக் காவல் துறை மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் துறை துணை அமைச்சரும் ஹிண்ட்ராஃப் தலைவருமான பி.வேதமூர்த்தி நேற்று கூறினார்.
பினாங்கில் நேற்று ஐந்து இளைஞர்கள் காவல் துறை நடவடிக்கையில் இறந்த சம்பவம் குறித்து கருத்துரைத்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர்கள் சுட்டார்கள் பதிலுக்கு நாங்களும் சுட வேண்டியிருந்தது என்று காவல்துறையினரின் அந்த வழக்கமான பதிலில் தமக்கு உடன்பாடு இல்லை என்று அவர் சொன்னார்.
நம் மக்களைக் காப்பதற்காகத்தான் காவல் துறை உறுப்பினர்களிடம் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. மாறாக, ஒருவர் குற்றவாளியா இல்லையா என்று தீர ஆராய்ந்து பார்க்காமல் உடனடியாக சுட்டு கொல்லுவதற்கு அல்ல.
சம்பந்தப்பட்டுள்ள அந்த சந்தேகப் பேர்வழிகள் குற்றங்களைப் புரிந்திருக்கிறார்கள் என்பது உறுதியானால் முடிந்தவரை அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
அனைவரின் உரிமையும் எப்போதும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம். இன்னொருவரின் உயிரைப் பறிக்க மற்றவர்களுக்கு உரிமை இல்லை என்று அவர் சொன்னார்.