கோலாலம்பூர், நவ 26 – அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மலேசியாவை உளவு பார்க்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அவரசரகால தீர்மானம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் புக்கிட் கட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்சுல் இஸ்கண்டார் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
நாடாளுமன்ற சபாநாயகர் பண்டிகர் அமின் மூலியா கூறுகையில்,”தற்போது இந்த தீர்மானத்திற்கு அவ்வளவு அவசரம் இல்லை. ஏனென்றால் இந்த விவகாரம் குறித்து அமெரிக்க தூதரகத்திற்கு ஏற்கனவே மலேசியா தனது எதிர்ப்பை வெளிப்படுத்திவிட்டது” என்று தெரிவித்தார்.
பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சம்சுல்,”இது போன்ற உளவு பார்க்கும் செயல்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. உடனடியாக இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.