செர்டாங், நவ 26 – சிங்கப்பூரின் புலனாய்வுக்குத் தேவையான எந்த ஒரு விவரத்தையும் மலேசிய பகிரத் தயாராக உள்ளது. எனவே இந்த வேவு பார்க்கும் வேலையெல்லாம் தேவையில்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
“முறைப்படி பார்த்தால், எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டின் ரகசியங்களை வேவு பார்க்க முயற்சி செய்யக்கூடாது” என்று சாஹிட் குறிப்பிட்டார்.
அனைத்துலக அளவில் வேவு பார்க்கும் வேலைக்கு அமெரிக்காவிற்கு உதவியாக சிங்கப்பூர் செயல்படுவதாக வெளிநாட்டுப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளதற்கு பதிலளிக்கும் விதமாக சாஹிட் இவ்வாறு கூறியுள்ளார்.
இவ்விவகாரத்தில் முன்னரே அமெரிக்காவிற்கு மலேசியா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது என்றும் சாஹிட் குறிப்பிட்டார்.
“அவர்களுக்குத் தேவையான தகவல்கள் அனைத்தையும் நாங்கள் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கின்றோம். அப்போதாவது அவர்கள் அண்டை நாடான நமக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைக்கட்டும்” என்று உள்துறை அமைச்சகம் உருவாக்கப்பட்ட நாளான இன்று புத்ரா பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் சாஹிட் தெரிவித்துள்ளார்.
உளவு விவகாரங்களில் அமெரிக்காவிற்கு உதவியாக சிங்கப்பூர் இருப்பதாக ஊடகங்கள் கூறுவது மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது என்று கூறி, சிங்கப்பூர் தூதரகத்தின் தலைவரை இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு மலேசிய அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு அமைப்பின் குத்தகைதாரர் எட்வார்ட் ஸ்நோடென், சிங்கப்பூரில் கடலுக்கடியில் செல்லும் கேபிள்களின் வழியாக இந்த உளவு வேலைகள் நடக்கிறது என்ற தகவலை வெளியிட்டுள்ளார் என்று ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
கடலுக்கடியில் கேபிள்களை பதித்து செயல்பட்டு வரும் சிங்கப்பூர் டெலிகம்யூனிகேசன்ஸ் (Singapore Telecommunications – SingTel) நிறுவனம் இது குறித்து கருத்து கூற மறுத்துவிட்டது.
“இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இது மிகப்பெரிய விவகாரமாக உருவெடுக்கும். அண்டை நாடுகளை உளவு பார்ப்பது நல்ல நண்பனை உளவு பார்ப்பது போன்றது” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் அனிபா அமான் குறிப்பிட்டுள்ளார்.