Home அவசியம் படிக்க வேண்டியவை ஆளில்லாத மலாக்கா விமான நிலையத்திற்கு ஏன் 240 மில்லியன் செலவு?

ஆளில்லாத மலாக்கா விமான நிலையத்திற்கு ஏன் 240 மில்லியன் செலவு?

569
0
SHARE
Ad

Melaka-International-Airportமலாக்கா, ஜூலை 3 – சுமார் 240 மில்லியன் ரிங்கிட்டில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட மலாக்கா அனைத்துலக விமான நிலையம், கடந்த மார்ச் 15 ம் தேதி முதல் விமான சேவைகள் இன்றி வெறிச்சோடிக் கிடப்பதாக ஆயர் கெரோ சட்டமன்ற உறுப்பினர் கூ பியோ தியாங் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், வாரத்தில் 3 முறை இந்தோனேசியாவின் பெக்கான் பாருவிற்கு விமான சேவைகள் இருந்த இந்த விமான நிலையம், 240 மில்லியன் செலவில் மறுசீரமைக்கப்பட்டது. விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவு செய்யப்பட்டது. எனினும் அதன் பின்னர் எந்த ஒரு விமான சேவையும் இயக்கப்படவில்லை என்றும் கூ பியோ சுட்டிக் காட்டினார்.

மேலும், “இதற்கு முன்பு, நடந்த சட்டமன்ற அமர்வுகளின் போது, மாநில அரசாங்கம், அறிவித்த கணக்கறிக்கையில், கடந்த 2012 -ம் ஆண்டு, இந்த விமான நிலையத்தில் 3.6 மில்லியன் செலவு செய்யப்பட்டு இயக்கப்பட்டது என்றும், ஆனால் 856,594 ரிங்கிட் மட்டுமே வருமானம் ஈட்டியது என்றும் தெரிவித்தது. 2013-ம் ஆண்டு 4.1 மில்லியன் செலவில் இயக்கப்பட்ட இந்த விமான நிலையம் 729,089 ரிங்கிட் மட்டும் ஈட்டியது என்று தெரிவிக்கப்பட்டது” என்று கூ விளக்கமளித்தார்.

#TamilSchoolmychoice

அண்மையில், மாநில அரசாங்கம் ஏர் ஏசியா மற்றும் ஃபயர்பிளை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், எனினும் விமான நிலைய சேவைக்கு மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்காத முந்தைய அனுபவத்தை கருத்தில் கொண்டு அந்நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாகவும் கூ தெரிவித்துள்ளார்.

ஆள் நடமாட்டமில்லாத அவ்விமான நிலையத்தில் பட்டம் விடும் போட்டியை மேற்கொண்டால் மலாக்காவிற்கு வரும் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்றும் கூ கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2010 ம் ஆண்டு, இவ்விமான நிலையத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் திறந்து வைத்தார் என்றும், இவ்விமான நிலையத்திற்காக, செலவு செய்த நிதியைக் கொண்டு மலாக்காஅரசாங்கம், 6,000 மலிவு விலை வீடுகளை அமைத்திருந்தால், மலாக்காவில் ஏழை மக்களின் சுமை சற்று குறைந்திருக்கும் என்றும் கூ தெரிவித்தார்.