Home கருத்தாய்வு இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்- இலங்கை பிரச்சினையில் நடுநிலை வகிப்பதால் தே.மு. இந்திய வாக்குகளை...

இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்- இலங்கை பிரச்சினையில் நடுநிலை வகிப்பதால் தே.மு. இந்திய வாக்குகளை இழக்குமா?

665
0
SHARE
Ad

கோலாலம்பூர்,பிப்.27  – நேற்று இலங்கை இந்தியத்தூதரகம் முன் கூடிய கெஅடிலான் கட்சி மற்றும் அரசு சார்பற்ற இயக்கங்கள், மலேசியா இலங்கையுடனான உறவை துண்டிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

நீறுபூத்த நெருப்பாக இருந்த மலேசியர்களின் இலங்கை படுகொலைகள் பற்றிய உணர்வுகள், சமீபத்தில் சேனல் 4 ஒளிபரப்பிய ஆவணப்படம் காரணமாக ஆவேசத்தையும், கண்டனத்தையும் எழுப்பியுள்ளது. இதுவே இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு வழிகோலியுள்ளது.

ஏற்கனவே ராஐபக்சே மலேசியாவிற்கு வருகை புரிய இருந்ததும், மக்களின் எதிர்ப்பால் அவர் வருகை ரத்து செய்யப்பட்டதும்  அனைவரும் அறிந்ததே.

#TamilSchoolmychoice

இலங்கை விஷயத்தில் தேசியமுன்னணியின் நடுநிலைக் கொள்கை தேர்தல் வெற்றியை பாதிக்குமா?

Mahinda_Rajapakse12_2மலேசியத்தமிழர்களைப் பொறுத்தவரை இலங்கைத்தமிழர்கள் மீது அனுதாபமும், அவர்களுக்கு எவ்வகையிலாவது உதவ அல்லது ஆதரவளிக்க வேண்டும் என்ற உணர்வும் எப்போதும் மேலோங்கியிருக்கிறது.

ஆனால் தேசிய முன்னணி அரசாங்கமோ இதுவரை இலங்கை அரசாங்கத்தை கண்டிக்கவில்லை என்பதுடன், ஐ.நா. சபையிலும் மனித உரிமை மாநாடுகளிலும் தேசியமுன்னணி அரசாங்கம்  நடுநிலைக் கொள்கையையே கடைப்பிடித்து வருகின்றது.

இது இலங்கைத் தமிழர்கள் மீது அனுதாபம் கொண்ட இந்திய வாக்காளர்களுக்கு மலேசியாவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிருப்தி எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு எதிர்ப்பான வாக்குகளாக மாறும் அபாயம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

தமிழர்கள் அதிகம் உள்ள சில தொகுதிகளில் இந்த இலங்கைப் பிரச்சனை குறித்த அதிருப்தி அதிகமாக வெளிப்படலாம். அதனால் தேசிய முன்னணியின்  வெற்றிவாய்ப்பு பாதிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

மலேசிய-இலங்கை தூதரக உறவுகளை தேசிய முன்னணி முறித்துக்கொள்ளுமா?

மலேசியத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இனப்படுகொலை செய்யும் இலங்கை அரசை மலேசிய அரசாங்கம் கடுமையாக கண்டிப்பதன் மூலம்,தேசிய முன்னணி அரசாங்கம் தமிழர்களின் வாக்குகளைக் கவர முடியும்.

ஆனால், தூதரக உறவுகளை முறிப்பது என்பது நாடுகளுக்குள்  பெரும்பாலும் நடப்பதில்லை. எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும் நாடுகள் தங்களுக்குள் தூதரக உறவுகளை முறித்துக் கொள்வது என்பது எப்போதும் அடிக்கடி நடப்பதில்லை.

இருப்பினும், இலங்கை தூதரகத்தின் முன் நடந்திருக்கின்ற ஆர்ப்பாட்டங்களை வைத்துப் பார்க்கும்போது, இனி  தேசிய முன்னணி அரசு மலேசியத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் இலங்கைப் பிரச்சனையில் கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்திருப்பார்கள்.

அப்படி செய்யாவிட்டால் இனமான உணர்வுள்ள தமிழர்களின் கணிசமான வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி இழக்கும் என நம்பலாம்.