இது குறித்து இந்துமதமாற்ற நடவடிக்கைக் குழுவின் தலைமைச் செயலாளர் அருண் துரைசாமி தனது முகநூல் (பேஸ்புக்கில்) பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், மலேசிய இந்தியர்கள் மூலம் இந்தியாவிலுள்ள நடிகர்களும், பிரபலங்களும் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அதற்கு பிரதிபலனாக மலேசிய இந்தியர்களின் நற்பணி பற்றியோ அல்லது சமுதாய உதவி பற்றியோ அவர்கள் கவலைப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “அகரம் வெற்றி குறித்துப் பகிரவும், கல்விப் பிரச்சாரம் செய்யவும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட நடிகர் சூர்யா, அதற்காக 250,000 மலேசியா ரிங்கிட் சன்மானம் கேட்டதாகவும்” அருண் துரைசாமி குறிப்பிட்டுள்ளார்.
மலேசியா குறித்தும், மலேசிய இந்திய இளைஞர்கள் குறித்தும் கொஞ்சமும் கவலைப்படாத இது போன்ற சுயநலம் கொண்ட பிரபலங்களை நாம் ஏன் ஒதுக்கக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அருண் துரைசாமியின் விளக்கம்
அருண் துரைசாமியின் முகநூல் பதிவு குறித்து அவரை ‘செல்லியல்’ தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதும் அவர் ஆதங்கத்துடன் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:-
“தமிழ் சினிமாவுக்கு மலேசியா இரசிகர்கள் ஆண்டுதோறும் அபரிதமான ஆதரவை வழங்குகின்றனர். ஓர் ஆண்டுக்கு தமிழ் சினிமா மலேசியா இரசிகர்கள் மூலம் வணிக ரீதியாக ஈட்டும் தொகை 180 மில்லியன் மலேசிய ரிங்கிட்டுக்கும் கூடுதலாகும். ஆனால், இவ்வளவு பணத்தை நம்மை வைத்துச் சம்பாதிக்கும் இவர்கள் பிரதிபலனாக நமது மலேசிய இந்திய சமுதாயத்திற்காக ஏதாவது திரும்பச் செய்கிறார்களா என்றால் எதுவும் இல்லை. மாறாக, அடிக்கடி வந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி, கலைநிகழ்ச்சிகள் நடத்தி நம்மிடமிருந்து ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் வசூலிக்கிறார்கள்”
“நாங்கள் இந்து சமய மாணவர்களின் நலனுக்காக நடத்தவிருக்கும் நிகழ்ச்சியில் சூர்யா நடத்தி வரும் அகரம் அறக்கட்டளை அமைப்பின் வெற்றி குறித்து பகிர்ந்து கொள்ளுமாறு அவருக்கு அழைப்பு விடுத்தோம். நாங்கள் நடத்தும் இந்த நிகழ்ச்சி வணிக நோக்கத்தைக் கொண்டதல்ல என்பதையும், மாணவர்களுக்கு உதவுவதற்காக நடத்தப்படுவது என்பதையும் தெளிவாகவே அவரது தரப்புக்குத் தெரிவித்திருந்தோம். சூர்யா மற்றும் அவருடன் வருபவர்களின் செலவுகளையும் நாங்களே ஏற்றுக் கொள்கின்றோம் என்றும் அகரம் அறக்கட்டளைக்கு ஐந்து இலட்சம் ரூபாய் நன்கொடை தருவதற்கும் நாங்கள் உறுதியளித்தோம்.”
“ஆனால், அந்தத் தொகைக்காக சூர்யா வருவார் என்று கனவிலும் நினைக்காதீர்கள் என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. 50 இலட்சம் ரூபாய் (மலேசிய ரிங்கிட் மதிப்பில் சுமார் 250,000 ரிங்கிட்டுக்கும் அதிகம்) அகரம் அறக்கட்டளைக்குத் தந்தால்தான் அவர் வருவார் என்றும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் கேட்பது அவருக்காக அல்ல – நல்ல பணிகள் செய்யும் அவரது அறக்கட்டளைக்குத்தான் என்பதை நாங்களும் அறியாதவர்கள் அல்ல. ஆனால், இங்கு நாங்கள் செய்வதும் இந்திய மாணவர்களின் குறிப்பாக தமிழ் மாணவர்களின் கல்வி நலனுக்காகத்தானே என்பதை ஏன் அவர் உணர மறுக்கின்றார் என்பதுதான் எங்களுக்கு விளங்கவில்லை”
மஹா இந்து இளைஞர் ஒற்றுமை எழுச்சி வேள்வி
அருண் துரைசாமி மேலும் தொடர்ந்தார் “இதனைத் தொடர்ந்து நாங்களும் ஒரு முடிவு செய்தோம். இந்த சினிமா பிரபலங்களின் பின்னால் போய் தொங்கிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு உள்நாட்டுக் கலைஞர்களை நாடுவோம் என்று முடிவெடுத்தோம். உள்நாட்டுக் கலைஞர்கள் சிலரை அணுகியபோது இந்திய சமுதாயத்திற்காக தங்களால் ஆன பங்கை வழங்க முன்வருவதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். நாங்கள் உள்நாட்டுக் கலைஞர்களோடு எதிர்வரும் சனிக்கிழமை சந்திப்பொன்றை நடத்தவிருக்கின்றோம். சில நல்ல முடிவுகளை எடுப்போம் என்றும் தெரிவித்துக் கொள்கின்றேன்”.
ஏழு இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை இந்து இளைஞர் இயக்கம் முன்னின்று நடத்துகின்றது. இதில் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அருண் துரைசாமி கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சி குறித்த மேல்விவரங்களை அறிய தொடர்பு கொள்ள வேண்டிய இணையத் தளம்:
http://unitehinduyouth.org.my
-செல்லியல் தொகுப்பு