சென்னை – நேற்று நடைபெற்று முடிந்த தமிழகத் தேர்தலில் சில கருத்துக் கணிப்புகள் திமுக மீண்டும் வென்று ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்த காரணத்தால் இன்று சன் தொலைக்காட்சியின் பங்கு விலைகள் பத்து சதவீதம் வரை உயர்ந்தன.
திமுக வென்றால் மீண்டும் கலைஞர் கருணாநிதி முதல்வராவார் என்பதால் அவரது பேரனும், சன் தொலைக்காட்சி குழுமத்தின் உரிமையாளருமான கலாநிதி மாறனின் ஆதிக்கம் மாநிலத்தில் ஓங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
தேர்தல் பிரச்சாரங்களின்போது நடத்தப்பட்ட தொலைக்காட்சி விவாதங்களில், கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் மேலோங்கும் என்றும் தகவல் ஊடகத் துறையில் சன் டிவி குழுமத்தின் ஆதிக்கமும், வீச்சும் மீண்டும் வரும் என்றும் பலர் அச்சம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கருணாநிதியின் பிரச்சாரங்களின்போது அவருடன் பெரும்பாலும் உடனிருந்தது கலாநிதியின் தம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் ஆவார். இவர் மீது பல்வேறு ஊழல் விவகாரங்கள் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் இன்னும் வழக்குகள் நடந்து வருகின்றன. அவற்றில் முக்கியமானது, மலேசிய மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் பங்குகள் வாங்கிய விவகாரமாகும்.
கலாநிதி, தயாநிதி இருவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக தலைவர்களில் முக்கியமானவருமான காலஞ்சென்ற முரசொலி மாறனின் மகன்களாவர்.
முரசொலி மாறன் கருணாநிதியின் மூத்த சகோதரியின் மகனாவார்.
இன்று செவ்வாய்க்கிழமை சன் டிவியின் பங்குகள் உயர்ந்ததற்கும், தமிழகத் தேர்தலில் திமுக வெல்லும் என்ற கருத்துக் கணிப்புக்கும் தொடர்பு இருப்பதாக பங்குச்சந்தை தரகர்கள் கருதுகின்றனர்.
சன்டிவி நிறுவனத்தின் வணிக நிலவரங்கள் சிறப்பாக இருப்பதும், மார்ச் இறுதியில் அதன் வணிக வருமானங்கள் சிறப்பாக இருந்ததும் அதன் விலைகள் உயர்ந்ததற்கான மற்ற காரணங்களாகப் பார்க்கப்படுகின்றது.
தேசியப் பங்கு சந்தையில் சன்டிவியின் பங்குகள் இன்று 9.88 சதவீதம் வரை உயர்ந்து 433 ரூபாய் விலையில் பங்குப் பரிவர்த்தனை நடைபெற்றது.