ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு வணிக ரீதியாக சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்போது பல நிறுவனங்களுக்கு இடையில் அந்த சந்தையைக் கைப்பற்ற போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
புதிய இரக கைத்தொலைபேசிகளின் பெருக்கம் இவ்வாறுதான் நிகழ்ந்தது. ஆப்பிள், சாம்சுங், சீனாவின் சியாவுமி போன்ற நிறுவனங்கள் கைத்தொலைபேசிகளை உற்பத்தி செய்வதில் போட்டி போட இன்னொரு புறத்தில் கூகுள் போன்ற நிறுவனங்கள் இணையவழிச் சேவைகளில் ஒரு மாபெரும் வணிக சந்தையைக் கைப்பற்றின.
இப்போது அடுத்த கட்டத் தொழில்நுட்பப் போர் என்பது மின்சாரக் கார்கள் தயாரிப்பில் நிகழும் என வணிக ஊடகங்கள் கணிக்கின்றன.
உதாரணத்திற்கு ஜெர்மனியின் ‘ஆவுடி’ (Audi) இரக சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் தனது முதலாவது எஸ்யுவி (SUV) எனப்படும் ஸ்போர்ட் யுடிலிடி வெஹிகல் (sport utility vehicle) இரக காரைத் தற்போது தயாரித்து வெள்ளோட்டம் விட்டு வருகிறது. இ-ட்ரோன் (e-tron) எனப் பெயர் கொண்ட இந்தக் கார் சுமார் 400 கிலோமீட்டர் தூரத்தை நிற்காமல் கடக்கும் ஆற்றல் வாய்ந்த மின்கலன்களைக் (பேட்டரி) கொண்டது. 30 நிமிடங்களில் அந்த மின்கலன்களுக்குள் முழு மின்ஆற்றலை மீண்டும் செலுத்தி விட முடியும் (ரீசார்ஜ்). முக்கியமாக பயணத்தின்போது எந்தவித சத்தமும் காரிலிருந்து வராது.
அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனமும் இத்தகைய மின்சாரக் கார்களை உருவாக்கி அதிவேகத்தில் அவற்றை மேம்படுத்தி வருகிறது.
அமெரிக்காவின் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தின் தலைமையகமான கலிபோர்னியா மாநிலத்தின் சிலிக்கோன் பள்ளத்தாக்கில் இயங்கும் நிறுவனங்களும் நவீனரக மின்சாரக் கார்களை வடிவமைப்பதிலும், தயாரிப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன,
சீனாவையும் நாம் ஒதுக்கித் தள்ள முடியாது. தனது பாணியில் பிரம்மாண்டமான அளவில் மின்சாரக் கார்களை உற்பத்தி செய்யும் திறன்களை வளர்த்துக் கொள்ள அந்த நாடு முற்பட்டிருக்கிறது.
ஆக, அடுத்தகட்ட புதிய தொழில்நுட்பமும் அதற்கான சந்தைக்கான போட்டியும் மின்சாரக் கார்களின் வணிகப் போட்டியாகத்தான் இருக்கும் என்கின்றன வணிக வட்டாரங்கள்!