புத்ரா ஜெயா, ஜூன் 17 – இவ்வாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் அம்னோ கட்சித் தேர்தலில், தலைமைப் பதவிகளுக்கு போட்டி தேவையில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பெர்டானா தலைமை அறக்கட்டளை சார்பாக இன்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மகாதீர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தேர்தல் என்பது ஜனநாயக முறைப்படி நடத்தப்பட வேண்டும்.ஆனால் உண்மையில் ஜனநாயகத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “போட்டியை நான் ஆதரிப்பவன் தான். அம்னோவில் மற்ற பதவிகளுக்கு போட்டி இருக்கலாமே தவிர தலைமைப் பதவிகளுக்கு வேண்டாம் என்பது எனது கருத்து.
ஒருவேளை அம்னோவில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டால் கட்சி இரண்டாக உடையும். மலேசியாவில் ஏற்கனவே மூன்று மலாய் கட்சிகள் உள்ளன.
அம்னோ இரண்டாக உடையும் பட்சத்தில் நான்காவது மலாய் கட்சி ஒன்று உருவாகும்.அதனால் தான் போட்டி வேண்டாம் என்று கூறுகிறேன். ” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.