கோலாலம்பூர், அக்டோபர் 9 – எதிர்வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்வுகளை அஸ்ட்ரோ தனது பல்வேறு அலைவரிசைகளில் ஒளிபரப்ப அணிவகுத்து வைத்திருக்கின்றது.
இந்த நிகழ்ச்சிகளின் விவரங்கள் நேற்று, தலைநகரின் பிரபல தங்கும் விடுதி ஒன்றில் பத்திரிக்கையாளர்களுக்கான சிறப்பு விருந்தொன்றில் அறிமுகப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது.
அஸ்ட்ரோவின் தீபாவளி நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை இரசிகர்கள் தெரிந்து கொள்வதற்காக சிறப்பு இணையத் தளம் பக்கம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இயங்கி வரும் www.astroulagam. com.my என்ற அஸ்ட்ரோவின் வலைத்தளத்தில் அஸ்ட்ரோவின் அனைத்து தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களைக் காணலாம்.
அதுமட்டுமல்லாமல், அஸ்ட்ரோவின் இந்த சிறப்பு இணையப் பக்கத்தில் தீபாவளி பலகாரம் செய்யும் முறைகள், அலங்காரம் செய்யும் முறை குறித்து துணுக்குகள், மற்றும் வீட்டை அழகுபடுத்தும் குறிப்புகளும் இடம் பெறும்.
தங்கத் திரை அலைவரிசையில் புத்தம் புதிய திரைப்படங்கள்
அஸ்ட்ரோவின் 241 அலைவரிசையான தங்கத்திரையில் தீபாவளியை முன்னிட்டு ஜிகர்தண்டா, வடகறி, அரிமா நம்பி, ஆகிய புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளியேறுகின்றன.
கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில், சித்தார்த், பாபி சிம்ஹா, இலட்சுமி மேனன் நடிப்பில் அண்மையில் வெளிவந்து வெற்றிக் கொடி நாட்டிய படம் ஜிகர்தண்டா. மதுரையில் வலம் வந்து கொண்டிருக்கும் பயங்கர ரவுடி ஒருவனின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்கும் முயற்சிகளில் இறங்கும் புதிய இளம் இயக்குநர் ஒருவரின் அனுபவங்களைப் பதிவு செய்யும் படம் இது.
ஜெய் கதாநாயகனாக, சுவாதி ரெட்டியுடன் நடித்து வெளிவந்த படம் வடகறி. இதில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் அதிரடி ஆட்டமும் உண்டு. கைத்தொலைபேசி ஒன்றினால் ஏற்படும் பிரச்சனைகளை நகைச்சுவையாக விவரிக்கும் படம் இது.
அரிமா நம்பி, விக்ரம் ஆனந்த், பிரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம். முதல் பத்து நிமிடங்கள் சாதாரணமாகப் போகும் இந்தப் படத்தில் கதாநாயகி மர்மமான முறையில் கடத்தப்பட்டு, காணாமல் போன தருணம் முதல் அடுத்தடுத்த காட்சிகளில் அதிரடி பரபரப்புடன் நகரும் படம் இது.
வெள்ளித்திரை அலைவரிசையிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் – திரைப்படங்கள்
தமிழ்ப்படங்களுக்கான பிரத்தியேக அலைவரிசையான வெள்ளித் திரையிலும் சிறப்பு நிகழ்ச்சிகளோடு, பல்வேறு புதிய, பழைய படங்கள் ஒளியேறவிருக்கின்றன.
அக்டோபர் 21ஆம் தேதி இரவு 10.00 மணிக்கு, அதாவது, தீபாவளிக்கு முதல் நாள் இரவு மலேசிய, சிங்கப்பூர் மற்றும் தமிழ்த் திரைக் கலைஞர்கள் இணைந்து படைக்கும் “என்றென்றும் கொண்டாட்டம்” என்ற நேரலை இசைப் படைப்பு அஸ்ட்ரோ வெள்ளித் திரையில் ஒளியேறுகின்றது.
தொடர்ந்து தீபாவளியன்று அதிகாலையில் நம்மை விழித்திருக்கச் செய்யும் வண்ணம் ‘நிமிர்ந்து நில்’ என்ற புதிய படம் ஒளியேறுகின்றது. ஜெயம் இரவி கதாநாயகனாக நடிக்க, சமுத்திரகனியின் இயக்கத்தில் வெளிவந்த படம் இது.
ஊழல் புரியாமல் வாழ்க்கை நடத்த விரும்பும் ஓர் இளைஞன் சந்திக்கும் சவால்கள், பிரச்சனைகளை சமூகக் கண்ணோட்டத்தோடும், சாட்டையடி கொடுக்கும் விதமாகவும், சமுத்திரகனி உருவாக்கி, இரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த படம் இது.
தீபாவளியன்று காலை 7 மணிக்கு, சிவனடியார்களின் வாழ்க்கையை விவரிக்கும் பழைய படமான திருவருட் செல்வர் இடம் பெறுகின்றது. சிவாஜி கணேசன் பலதரப்பட்ட வித்தியாச வேடங்களில் நடித்து அசத்திய படம் இது.
அக்டோபர் 22ஆம் தேதி, தீபாவளியன்று காலை 10.30 மணியளவில் ஒளியேறும் நகைச்சுவை கலந்த காதல் கதை ‘இது கதிர்வேலன் காதல்’. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், அதைவிட முக்கியமாக சந்தானம் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கும் கலகலப்பான படம் இது.
சிவகார்த்திகேயனின் வெற்றிப் படைப்பு ‘மான் கராத்தே’ தீபாவளி தினத்தன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஒளியேறுகின்றது. குத்துச் சண்டை என்றால் என்னவென்றே தெரியாத ஒருவன் குத்துச் சண்டை கோதாவில் சந்தர்ப்ப வசத்தால் தள்ளப்பட்டு, அதனையே வாய்ப்பாக உருமாற்றி எப்படி புது மனிதனாக உருவெடுக்கின்றான் என்பதை சிவகார்த்திகேயன் தனக்கே உரித்தான பாணியில் நடித்து வெளிப்படுத்தியிருக்கும் படம் ‘மான் கராத்தே’.
அல்டிமேட் ஸ்டார் அஜித் ஆகக் கடைசியாக நடித்து வெளிவந்த வெற்றிப்படம் ‘வீரம்’. தமன்னாவுடன் இந்தப் படத்தில் இணையும் அஜித் தம்பிகளுக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்வதை நகைச் சுவையோடும், சண்டைக் காட்சிகளோடும் விவரிக்கும் கலகலப்பான படம் ‘வீரம்’
இந்த திரைப்படங்கள் தவிர மேலும் பல சிறப்பு நிகழ்ச்சிகள், அஸ்ட்ரோவின் பல்வேறு அலைவரிசைகளில் ஒளிபரப்பாக உள்ளன.
மற்ற சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள், குறிப்புகள் தொடர்ந்து செல்லியலில் வெளியிடப்படும்.