புதுடில்லி – மலேசியத் துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹாமிடி மூன்று நாள் அலுவல் வருகை மேற்கொண்டு நேற்று இந்தியத் தலைநகர் புதுடில்லி சென்று சேர்ந்துள்ளார்.
புதுடில்லி வந்தடைந்த சாஹிட்டை வரவேற்கும் மலேசியத் தூதரக அதிகாரிகள்
புதுடில்லியில் அவர் மலேசியத் தூதரகத்திற்கு வருகை தந்து அங்கு மலேசியத் தூதர் டத்தோ நைமுன் அஷாக்லி முகமட் மற்றும் மற்ற மலேசியத் தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தினார். நேற்று மலேசியத் தூதர் சாஹிட்டுக்கு விருந்தளித்து கௌரவித்தார்.
மங்கோலியாவில் நடைபெற்ற 11வது ஆசிய-ஐரோப்பா கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் தனது மனைவியுடன் புதுடில்லி வந்திருக்கும் சாஹிட், பிரதமர் நரேந்திர மோடியை இன்று மரியாதை நிமித்தம் சந்திக்கவுள்ளார்.
புதுடில்லியில் உள்ள மலேசியத் தூதரகத்தில் சாஹிட்…
பின்னர் அவர் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்துவார். சாஹிட் ஹாமிடிக்கு ராஜ்நாத் சிங் விருந்தளித்து கௌரவிக்கவும் உள்ளார்.
தெலுங்கானா தொழில்துறை அமைச்சர் கே.டி.இராமராவை நாளை சாஹிட் புதுடில்லியில் சந்திக்கின்றார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகனுமான இராமராவ், அண்மையில் மலேசியாவுக்கு வாணிப நோக்கத்துடனான வருகையை மேற்கொண்டிருந்தார்.
புதுடில்லியில் உள்ள மலேசியத் தூதரகத்தில், அதிகாரிகளுடன் சாஹிட்…
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் சந்திக்கவிருக்கும் சாஹிட், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்துவார்.
நாளை நேரு பிளேஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள மலேசியாவுக்கான குடிநுழைவு அனுமதி (விசா) பரிசீலனை மையத்திற்கு வருகை தந்து சாஹிட் பார்வையிடுவார்.
புதன்கிழமை புதுடில்லியிலிருந்து புறப்பட்டு, இரண்டு நாள் இலங்கைக்கான அலுவல் வருகை மேற்கொள்ளும் சாஹிட், கொழும்பு சென்றடைவார்.
(படங்கள்: நன்றி – டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் டுவிட்டர் பக்கம்)