ஜோர்ஜ் டவுன் – இன்று ஞாயிற்றுக்கிழமை ஆங்கில நாளேடான ‘ஸ்டார்’ பத்திரிக்கையில் “பினாங்கு மாநிலத்திற்கு திடீர் தேர்தலா?” என்ற தலைப்பில் அந்தப் பத்திரிக்கையின் தலைமை அரசியல் நிருபர் ஜோஸ்லின் டான் எழுதியுள்ள, கட்டுரை தொடர்பில் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
ஸ்டார் பத்திரிக்கைக்கும், அரசியல் கட்டுரையாளர் ஜோஸ்லின் டானுக்கும் அவதூறு வழக்குக்கான கடிதம் அனுப்ப தனது வழக்கறிஞர்களைப் பணித்துள்ளதாகவும் குவான் எங் தெரிவித்துள்ளார்.
“ஸ்டார்” பத்திரிக்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஜோஸ்லின் டான் கட்டுரை…
இதற்கு முன் ஏற்கனவே ஒருமுறை ஸ்டார் பத்திரிக்கைக்கும் ஜோஸ்லின் டானுக்கும் எதிராக குவான் வழக்கு தொடுத்திருக்கின்றார். ஆனால் அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து முடிவு காணப்பட்டது.
ஸ்டார் பத்திரிக்கையின் உரிமையாளரான, மசீசவும், தேசிய முன்னணியும் தொடர்ந்து தன்மீது அவதூறுகளைப் பரப்பி வருவதாகவும், குற்றம் சாட்டியுள்ள குவான் எங், ஜூன் 30ஆம் தேதி தன்மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கைத் தொடர்ந்து தனது மதிப்பையும், நற்பெயரையும் குலைக்கும் வண்ணம் அந்தக் கட்சிகள் தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே, பத்திரிக்கைகள் மீதும் செய்தி இணையத் தளங்கள் மீதும் லிம் குவான் எங் அவதூறு வழக்குகள் தொடுத்து, அவற்றில் சிலவற்றில் வெற்றி பெற்றிருக்கின்றார் – சிலவற்றில் தோல்வியும் அடைந்திருக்கின்றார்.