புதுடில்லி – நேற்று ஞாயிற்றுக்கிழமை அருணாச்சல பிரதேச முதல்வராகப் பதவியேற்ற பேமா காண்டு (படம்) இன்றைய நிலையில் இந்தியாவிலேயே வயது குறைந்த முதல்வராகத் திகழ்கின்றார். அவருக்கு வயது 37 ஆகும்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் பதவியேற்கும் பேமா காண்டுவின் தந்தை டோர்ஜி காண்டு அருணாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதல்வராவார். டோர்ஜி காண்டு 2011ஆம் ஆண்டில் ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார்.
45 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும், மேலும் கூடுதலாக 2 சுயேச்சைகளில் ஆதரவும் இருப்பதாகவும் பேமா காண்டு உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து அவரை முதல்வராக மாநில ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
டில்லியிலுள்ள மதிப்புமிகு கல்விக் கூடங்களில் ஒன்றான இந்து கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற பேமா காண்டு, மிக இளவயதிலேயே, தனது தந்தையுடன் அரசியல் பணிகளில் ஈடுபட்டார்.
இந்தியாவின் வடமேற்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம், சீனாவுடன் எல்லையைக் கொண்ட மாநிலமாகும்…
குடும்பத்தில் மூத்த மகனான பேமா காண்டு, 2011இல் தனது தந்தையின் மறைவைத் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். அவரது தந்தை வகித்த சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அருணாச்சல பிரதேசத்தின் சட்டமன்றத்திற்குள் காலடி வைத்தார்.
அண்மையில் நடைபெற்ற அரசியல் இழுபறியால், அருணாச்சல மாநில அரசாங்கத்தை பாஜகவின் மத்திய அரசாங்கம் ஆட்சியிலிருந்து நீக்கி, ஆளுநர் ஆட்சியை அமுல்படுத்தியது.
பின்னர், உச்ச நீதிமன்றம் அருணாச்சல மாநில அரசை நீக்கியது செல்லாது என தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதிய அரசாங்கத்தில் முதல்வராகப் பதவியேற்கின்றார் பேமா காண்டு.
அருணாச்சல மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நபம் துக்கி பதவி விலகியுள்ளதைத் தொடர்ந்து, புதிய முதல்வராக பேமா காண்டு பதவியேற்றுள்ளார். இந்தப் பதவி மாற்றத்திற்குப் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி செயல்பட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.