இத்தாநகர்: இந்தியாவின் வடகிழக்கு எல்லை மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. நடப்பு முதல்வர் பேமா காண்டு (படம்) தலைமையில் 43 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் மேலும் இரண்டு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களுமாக மொத்தம் 45 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக தலைமையிலான ஆட்சி அமைக்க நேற்றிரவு ஆதரவு தந்துள்ளனர்.
தற்போது காங்கிரஸ் ஏறத்தாழ அருணசலப் பிரதேச சட்டமன்றத்திலிருந்து முற்றாகத் துடைத்தொழிக்கப்பட்ட நிலைமைக்கு ஆளாகியுள்ளது.
60 பேர் கொண்ட அருணாசலப் பிரதேச சட்டமன்றத்தில் காங்கிரஸ் 44 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. பாஜக 11 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இரண்டு பேர் சுயேச்சை உறுப்பினர்களாக இருந்து வந்தனர். இவர்களின் முன்னாள் முதல்வர் நபாம் துக்கி மட்டுமே தற்போது காங்கிரசில் எஞ்சியுள்ள சட்டமன்ற உறுப்பினராவார். இவருக்கு பதிலாகத்தான் பேமா காண்டு முதல்வராக நியமிக்கப்பட்டார்.
அருணாசல மக்கள் கட்சி (People’s Party of Arunachal ) என்று அழைக்கப்படும் கட்சியில் பேமா காண்டு தலைமையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், சுயேச்சை உறுப்பினர்கள் என மொத்தம் 45 பேர் இணைந்துள்ளனர். இந்தக் கட்சி பாஜகவின் ஆதரவு கட்சியாகும்.