Home நாடு ஹலால் சான்றிதழ் கட்டாயமில்லை – சாஹிட் அறிவிப்பு

ஹலால் சான்றிதழ் கட்டாயமில்லை – சாஹிட் அறிவிப்பு

158
0
SHARE
Ad
செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெற்ற மஇகா தேசியப் பொதுப் பேரவையில் சாஹிட் ஹாமிடி உரையாற்றியபோது…

புத்ரா ஜெயா – பன்றி இறைச்சி அல்லது மதுபானம் விற்காத உணவகங்களுக்கு ஹலால் சான்றிதழை கட்டாயமாக்க வேண்டும் என்ற பரிந்துரை இருந்தபோதிலும், ஹலால் சான்றிதழ் விஷயத்தில் தற்போதைய நிலையையே தொடர அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி அறிவித்தார்.

இதன்மூலம் இந்த விவகாரம் தற்காலிகமாக ஒரு முடிவுக்கு வந்தது. செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் ஜசெகவில் தெரசா கோக் இந்த விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து ஹலால் விவாதங்கள் நாடு தழுவிய அளவில் எழுந்தன.

அண்மையில் நடைபெற்ற மஇகா தேசியப் பொதுப் பேரவையில் சாஹிட் ஹாமிடி கலந்து கொண்டபோது அவரின் முன்னிலையில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்,  ஹலால் விவகாரம் தொடர்பான பிரச்சனைகளை எடுத்துரைத்தார்.

#TamilSchoolmychoice

அதற்குப் பதிலளித்த சாஹிட் ஹாமிடி அமைச்சரவையில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

“தற்போதைய கொள்கை தொடரும். மலேசியாவில் ஹலால் சான்றிதழுக்கான அனைத்து தேவைகள் மற்றும் தரநிலைகளைப் பின்பற்ற தயாராக உள்ள எந்தவொரு தொழிலுக்கும் ஹலால் சான்றிதழ் வழங்குவது தொடரும். இந்த செயல்முறை மூலம் பெறப்படும் மலேசிய ஹலால் சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு ஹலால் சான்றிதழ் தரநிலைகளை எப்போதும் பின்பற்றுவதற்கான அவர்களின் அர்ப்பணிப்புக்கு கூடுதல் மதிப்பை வழங்கும்,” என்று துணை பிரதமர் சாஹிட் ஹாமிடி நேற்று (செப்டம்பர் 18) வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பிரதமர் அலுவலக அமைச்சர் (மத விவகாரங்கள்) முகமட் நயீம் மொக்தார் இந்த பிரச்சினை குறித்து அமைச்சரவைக்கு விளக்கமளித்தார்.

இந்த மாத ஆரம்பத்தில், பன்றி இறைச்சி அல்லது மதுபானம் விற்காத உணவகங்கள் மற்றும் உணவு நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழை கட்டாயமாக்குவதற்கான ஒரு முன்மொழிவை இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாகிம்) பரிசீலித்து வருவதாக நயீம் கூறியிருந்தார்.

பின்னர் அவர், ஹலால் சான்றிதழை கட்டாயமாக்க ஜாகிம் திட்டம் உள்ளதா என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளித்ததாக தெளிவுபடுத்தினார். அதற்கு அவர் ஆம் என்று பதிலளித்தார். ஆனால் அது இன்னும் ஆய்வு செய்யப்படாத ஒரு யோசனை மட்டுமே என்பதை வலியுறுத்தினார்.

எனினும், இந்த யோசனை முன்வைக்கப்பட்டதிலிருந்து கடந்த வாரங்களில் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் அரசாங்கத்தை இந்த முன்மொழிவை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தினார். இது வணிகங்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என்றும், மலேசியாவை அனைத்துலக அளவில் நகைப்புக்கு உள்ளாக்கும் என்றும் அவர் கூறினார்.

அவரது கருத்துகள் மீது எதிர்ப்புகள் எழுந்ததோடு, அவர் மீதான காவல்துறை விசாரணைக்கும் வழிவகுத்துள்ளது.

தனது சீன அறிக்கையின் தவறான மொழிபெயர்ப்பே முரண்பட்ட புரிந்துணர்வுக்குக் காரணம் என கோக் அறிக்கையைத் தற்காத்துள்ளார்.

இதற்கிடையே, ஹலால் சான்றிதழ் சேவைகளை மேம்படுத்துவதில் இஸ்லாமிய மத விவகார இலாகா உறுதியாக உள்ளதாக ஜாஹித் உறுதியளித்தார்.

சான்றிதழ் செயல்முறைக்கு உதவ மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பயிற்சி மற்றும் மானியங்கள் போன்ற பல்வேறு ஊக்கத்தொகைகளை வழங்குவதாக அவர் எடுத்துரைத்தார்.