Home Featured வணிகம் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2016 – அஸ்ட்ரோ முருகையாவுடன் நேர்காணல்!

அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2016 – அஸ்ட்ரோ முருகையாவுடன் நேர்காணல்!

1257
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அஸ்ட்ரோவின் மாபெரும் இரண்டாவது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் தொடங்க இன்னும் நான்கு நாட்கள் தான் உள்ளன.

இந்த ஆண்டு தீபாவளிக்கு பல இரகங்களில் புத்தாடைகள், ஆபரணங்கள் வாங்க வேண்டும் என்று இப்போதே சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பல எதிர்பார்ப்புகளோடு காத்திருப்பார்கள். அதுமட்டுமா? இந்த தீபாவளிக்கு இப்படிப்பட்ட புதிய முயற்சிகளைத் தொடங்க வேண்டும் என ஒவ்வொரு குடும்பத்திலும் பல திட்டங்களும் இருக்கும்.

அதையெல்லாம் ஒவ்வொரு இடமாகத் தேடி அலைந்து கொண்டிருந்தால், நேரம் விரையமாவதோடு,வீண் அலைச்சல் தான்.

#TamilSchoolmychoice

astroஇதையெல்லாம் கருத்தில் கொண்டு, ஜவுளி முதல் தொழில்நுட்பம் வரை பலதுறைகள் சார்ந்த வர்த்தகங்களையும் ஒரே இடத்தில் ஏற்பாடு செய்துள்ளது அஸ்ட்ரோ.

வரும் செப்டம்பர் 30 தொடங்கி, அக்டோபர் 2 வரை தொடர்ந்து, 3 நாட்களுக்கு ஜிஎம் கிள்ளானில் (GM Klang Wholesale City) வளாகத்தில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இந்நிகழ்வு மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

ஜவுளி, ஆபரணங்கள், தொலைத் தொடர்பு, இயற்கை வளம், சுற்றுலா, காப்புறுதி, தொழில்நுட்பம் என பலதரப்பட்ட துறைகளைச் சார்ந்த முகப்புகள் இந்த விழாவில் இடம்பெறவுள்ளன.

இது குறித்து அஸ்ட்ரோ தமிழ் நிகழ்ச்சியின் துணைத் தலைவரும், அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் நிர்வாகியுமான முருகையா வெள்ளையிடம் இது குறித்த நேர்காணல் இதோ:

????????????????????????????????????

செல்லியல்: இந்த ஆண்டு இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டத்தின் சிறப்புகள் பற்றி ?

முருகையா: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முகப்புகளுக்கு (Booths) நிறைய வரவேற்பு கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 80 முகப்புகளுக்கும் மேல் எதிர்பார்க்கிறோம். அதோடு மூன்று நாட்களுக்கு வண்ணமயமான பல  சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல் நாள் மிகப் பிரம்மாண்டமான அறிமுக விழாவில் தொடங்கி, இரண்டாம் நாள், மூன்றாம் நாளில் தொலைக்காட்சி கலைஞர்கள், வானொலி அறிவிப்பாளர்களின் நிகழ்ச்சிகள் என அந்த இடமே கொண்டாட்டமாக இருக்கப் போகிறது.

அதோடு, முறுக்கு சுடும் போட்டி, தீபாவளி ஆடை அலங்காரப் போட்டி, பலகுரல் போட்டி எனப் பல வகையான போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

செல்லியல்: கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் சிறப்பு விருதுகள் வழங்கப்படவுள்ளனவா?

முருகையா: ஆமாம்.. இந்த ஆண்டு 6 உறுதுணை விருதுகள் வழங்கப்படவுள்ளன. சமூகசேவைகளில் சிறந்து விளங்கும்  6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அவ்விருதுகள் வழங்கப்படும்.

செல்லியல்: கடந்த ஆண்டு மக்களிடமிருந்து எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்தது?

முருகையா: கடந்த ஆண்டு வர்த்தக விழாவிற்குக் கிடைத்த ஆதரவை இரண்டு வகையில் சொல்லலாம். ஒன்று வர்த்தகர்கள், இரண்டாவது பொதுமக்கள்.

வர்த்தகர்களை எடுத்துக் கொண்டால், முகப்பு எடுத்தவர்கள் யாரும் எந்த ஒரு நஷ்டமும் அடையவில்லை. இதுவரை எந்த ஒரு புகாரும் அவர்களிடமிருந்து வரவில்லை. அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

அதேபோல், கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 2 லட்சத்து 20 ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொண்டனர். எனவே இந்த ஆண்டு சுமார் 3 லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த ஆண்டு இன்னொரு வசதி என்னவென்றால், போர்ட் கிள்ளான் இரயில் நிலையத்தில் இருந்து ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டிக்குச் செல்ல இலவச பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. அரைமணி நேரத்திற்கு ஒரு பேருந்து இருக்கும். அதன் மூலம் மக்கள் எளிதில் வர்த்தக விழா நடைபெறும் இடத்தை வந்தடையலாம்.

செல்லியல்: இந்திய வர்த்தக விழாவிற்கு மற்ற இன மக்களிடையே எப்படிப்பட்ட வரவேற்புக் கிடைக்கின்றது?

முருகையா: நல்ல கேள்வி.. இந்திய வர்த்தக விழா நடைபெறும் ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டியை நாங்கள் முதலில் அணுகிய போது, இது மலாய்காரர்கள் வசிக்கும் இடம் ..இங்கு இந்திய வர்த்தக விழா சரியாக வருமா? என்றார்கள். ஆனால் மலாய்க்காரர்கள், சீனர்கள் என அனைத்து இன மக்களிடமிருந்தும் மிகப் பெரிய ஆதரவு கிடைத்தது.

இந்த ஆண்டு கூட, முகப்பிடங்கள் எடுத்திருப்பது இந்தியர்கள் மட்டுமல்ல. அதில் மலாய்காரர்களும் இருக்கிறார்கள். சீனர்களும் இருக்கிறார்கள். இது போன்ற தளங்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்தியர்கள் அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எங்களின் ஆசை.

இவ்வாறு முருகையா வெள்ளை, நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். வரும் செப்டம்பர் 30 தொடங்கி, அக்டோபர் 2 வரை, 3 நாட்களுக்குக் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்த பிரம்மாண்ட வர்த்தக விழாவில் மக்கள் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதோடு, அக்டோபர் 3-ம் தேதி திங்கட்கிழமை பொதுவிடுமுறை என்பதால், இவ்விழாவை மக்கள் பயன்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

அதோடு, இணையதளம், தொலைக்காட்சி மற்றும் வானொலி வாயிலாக ஆர்வமுள்ள வணிகர்களுக்கு விளம்பரத்தை ஏற்படுத்தித் தர மிக ஆவலாய் உள்ளது அஸ்ட்ரோ. மேலும், அனைத்துலக ரீதியில் வணிகர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் பங்கேற்பதன்வழி உள்ளூர் வணிகர்கள் தங்களின் வியாபாரத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லும் வாய்ப்பும் காத்திருக்கிறது.

ஆர்வமுள்ளவர்கள் www.astrocircle.com.my  அகப்பக்கத்திற்குச் சென்று இதற்கான மேல் விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.