Home நாடு மஇகா மறுதேர்தல்: சுயேட்சைக் குழு அமைக்க வேண்டும் – டி.மோகன் வலியுறுத்தல்

மஇகா மறுதேர்தல்: சுயேட்சைக் குழு அமைக்க வேண்டும் – டி.மோகன் வலியுறுத்தல்

875
0
SHARE
Ad
IMAG1092
செய்தியாளர் சந்திப்பில் இடமிருந்து டத்தோஸ்ரீ வேள்பாரி, டத்தோ ஹென்ரி, டத்தோ டி.மோகன், டத்தோ முனியாண்டி, டத்தோ ஆஸ்.எஸ்.மணியம் மற்றும் குழுவினர்

கோலாலம்பூர், டிசம்பர் 10 –  தான் நாடு திரும்பியவுடன் மஇகா தேர்தல் கமிட்டியை சந்தித்து தேர்தல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதாக, நேற்று ‘தி மலேசியன் டைம்ஸ்’ இணைய செய்தித் தளத்திற்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தகவல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று மஇகா தலைமையகத்தில் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டி.மோகன் தலைமையில் அது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அச்சந்திப்பில் டி.மோகன் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“மஇகா மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று சங்கப்பதிவிலாகா அறிவித்துள்ளதன் படி, இன்னும் 85 நாட்களே உள்ளது. எனவே விரைவில் ஒரு சுயேட்சை குழுவை அமைத்து இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பதோடு, மஇகா மறுதேர்தலை நடத்த வேண்டும். அப்படி நடத்தவில்லை என்றால் மஇகா-வின் பதிவு ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது.”

“பழனிவேல், தான் வந்தவுடன் தேர்தல் கமிட்டியை சந்திப்பதாக செய்தி இணையத்தளம் ஒன்றிற்கு தகவல் அனுப்பியுள்ளார். அவர் எப்போது வருவார் என்று தெரியாது. அவரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண டத்தோஸ்ரீ பழனிவேலுடன் கலந்து பேசத் தயாராக இருக்கிறோம். விரைவில் மறுதேர்தல் நடத்தவில்லை என்றால் டாக்டர் சுப்ரமணியம் கூறியுள்ளது போல் டிசம்பர் 5 மட்டுமல்ல நிரந்தரமாகவே மஇகா கட்சிக்கு கறுப்பு நாளாக மாறிவிடும். எனவே விரைவில் சுயேட்சை குழு ஒன்றை அமைத்து நியாயமான முறையில் மஇகா மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும்.”

“அந்த சுயேட்சைக் குழுவில் பொதுவான நபர்கள் இருக்க வேண்டும். அதில் பழனிவேல் ஆதரவாளர்கள், அவருக்கு ஜால்ரா அடிப்பவர்கள் என யாரும் இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.சுயேட்சைக் குழுவில் மஇகா-வின் சிறந்த தலைவர்கள், அவர்கள் முன்னாள் தலைவர்களாகக் கூட இருக்கலாம். அவர்களையெல்லாம் வைத்து இந்த சுயேட்சைக் குழுவை அமைக்க வேண்டும். அதேவேளையில் தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்க எங்களில் 3 அல்லது 5 பேரை நியமனம் செய்ய வேண்டும். அதே போல் ஜெயித்தவர்கள் சார்பிலும் 3 அல்லது 5 பேரை நியமனம் செய்ய வேண்டும். நாங்கள் எங்களை தேர்தல் கமிட்டியில் நியமனம் செய்யும் படி கூறவில்லை. தேர்தல் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யுங்கள் என்று தான் கேட்கிறோம். காரணம் மீண்டும் ஒரு முறை தேர்தலில் குளறுபடிகள் ஏற்படுவதை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை” என்று டி.மோகன் தெரிவித்தார்.

தவறுக்குப் பொறுப்பேற்று பதவி விலகுங்கள்!

IMAG1103

மேலும், மோகன் கூறுகையில், “மஇகா தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதை ஆர்ஓஎஸ் உறுதிப்படுத்தியுள்ளது. அப்படியானால் தலைவர் என்ற முறையில் அதற்கு முழுப் பொறுப்பேற்று பழனிவேல் பதவி விலக வேண்டும். சட்டப்பூர்வமாக அவர் பதவி விலகுவதற்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. என்றாலும் ஒரு உண்மையான, நேர்மையான தலைவராக இருந்தால், தனது தலைமையில் நடந்த தவறுக்குப் பொறுப்பேற்று அவர் பதவி விலகுவார். காரணம் ஒரு தலைவருக்கு நேர்மை என்பது மிக மிக அவசியம்” என்று தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் ஆர்ஓஎஸ்  அனுப்பிய உத்தரவு கடிதத்தின் சாராம்சமும் செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

செய்தி, படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்