Home நாடு சபா தேர்தல் சூடு பிடிக்கிறது – பெர்சாத்து 18 தொகுதிகளில் போட்டியிடும்!

சபா தேர்தல் சூடு பிடிக்கிறது – பெர்சாத்து 18 தொகுதிகளில் போட்டியிடும்!

52
0
SHARE
Ad
ஹம்சா சைனுடின்

கோத்தாகினபாலு : சபா சட்டமன்றத்திற்கான தேர்தல் இந்த ஆண்டு 2025-இல் நடைபெற்றாக வேண்டும். அதனை முன்னிட்டு சபா கட்சிகளுக்கிடையிலான பேரங்கள் – கூட்டணி மாற்றங்கள் – குறித்த பேச்சு வார்த்தைகள் சூடுபிடித்து வருகின்றன.

பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் ஓர் அங்கமான பெர்சாத்து கட்சி 18 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என அந்தக் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் அறிவித்துள்ளார்.

மற்ற கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவும், கணிசமான சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி மாநில அரசாங்கத்தை அமைக்கவும் பெர்சாத்து கட்சி முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் ஹம்சா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற சபா சட்டமன்றத் தேர்தலில் பெர்சாத்து 18 தொகுதிகளில் போட்டியிட்டு 11 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

நேற்று புதன்கிழமை (ஜனவரி 15) சபா செபாங்கார் நகருக்கு வருகை தந்து ஹம்சா பெர்சாத்து ஆதரவாளர்களைச் சந்தித்தார்.

பெர்சாத்து கட்சியின் உதவித் தலைவராக இருக்கும் ரோனால்ட் கியாண்டி சபா மாநிலத் தேர்தல்களில் முன்னிறுத்தப்படுவார் என நம்பப்படுகிறது. அவர் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறார்.

ஆளும் ஜிஆர்எஸ் கூட்டணி பிகேஆர், ஜசெக, பக்காத்தான் ஹாரப்பான் ஆகிய கட்சிகளுடன் இணைந்து சபா மாநில அரசாங்கத்தை ஆட்சி செய்து வருகிறது.

நடப்பு சபா முதலமைச்சர் ஹாஜிஜி நூர் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் ஆதரவுடன் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனாலும், டிசம்பர் 2022-இல் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அன்வார் இப்ராகிம் பிரதமரானதும் அந்தக் கூட்டணியில் இருந்து விலகினார்.

இந்த முறை முற்றிலும் மாறுபட்ட அளவில் சபா கட்சிகளுக்கிடையில் கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.