Home உலகம் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் ஜனவரி 19 முதல் அமலுக்கு வருகிறது!

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் ஜனவரி 19 முதல் அமலுக்கு வருகிறது!

45
0
SHARE
Ad

டோஹா (கத்தார்) : ஒருவழியாக காசா பகுதியில் ஹமாஸ் – இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வரும் என இந்த போர்நிறுத்தத்திற்குப் பாடுபட்ட நடுவர்கள் தெரிவித்துள்ளனர். 15 மாதங்களாக நடந்த போரில் காசா பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டு, மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வந்தது.

இந்த சிக்கலான கட்டம் கட்டமான ஒப்பந்தத்தின்படி, முதல் கட்டமாக 6 வார கால போர் நிறுத்தம் அமலுக்கு வரும். இதன்படி இஸ்ரேல் படைகள் காசா பகுதியிலிருந்து படிப்படியாக வெளியேறும். காசாவை கட்டுப்படுத்தும் ஹமாஸ் இயக்கத்தால் பிடித்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் விடுவிக்கப்படுவர். அதற்கு பதிலாக இஸ்ரேலில் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்படுவர்.

கத்தார் நாட்டின் தலைநகர் டோஹாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துர்ரஹ்மான் அல் தானி கூறுகையில், போர் நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வரும் என்றும், இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான அடுத்தடுத்த கட்டங்கள் குறித்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“இந்த ஒப்பந்தம் காசாவில் போரை நிறுத்தும். பாலஸ்தீன மக்களுக்கு மிகவும் தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கும். மேலும் 15 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த கைதிகளை அவர்களின் குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கும்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாஷிங்டனில் தெரிவித்தார்.

முதல் கட்டத்தில் 33 இஸ்ரேலிய கைதிகள், அதாவது அனைத்து பெண்கள், குழந்தைகள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் விடுவிக்கப்படுவர். இரண்டு அமெரிக்க கைதிகள் முதல் கட்டத்தில் விடுவிக்கப்படுவர் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை நடந்த போரில் 46,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவின் பெரும்பாலான மக்கள் போரினால் இடம் பெயர்ந்துள்ளனர்.