கோலாலம்பூர், டிசம்பர் 10 – தான் நாடு திரும்பியவுடன் மஇகா தேர்தல் ஆணையத்தை சந்தித்து தேர்தல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதாக, நேற்று ‘தி மலேசியன் டைம்ஸ்’ இணைய செய்தித் தளத்திற்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தகவல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று மஇகா தலைமையகத்தில் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டி.மோகன் தலைமையில் அது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அச்சந்திப்பில் டி.மோகன், மஇகா வியூக இயக்குநர் டத்தோஸ்ரீ சா.வேள்பாரி, எஸ்பி.மணிவாசகம், ட த்தோ ஹென்ரி ஆசீர்வாதம், , டத்தோ முனியாண்டி, டத்தோ ஆர்.எஸ்.மணியம் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ஓஎஸ் உத்தரவின் படி, மஇகா மறுதேர்தலை குறிப்பிட்ட நாட்களுக்குள் நடத்த வேண்டும் என்றும், இந்த தவறுக்கு முழுப் பொறுப்பேற்று கட்சியின் தலைவர் என்ற முறையில் டத்தோஸ்ரீ பழனிவேல் பதவி விலக வேண்டும் என்று டி.மோகன் உள்ளிட்ட தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
அச்சந்திப்பில் வேள்பாரி கூறுகையில், “நாடு திரும்பியவுடன் தேர்தல் ஆணையத்தை சந்திப்பதாக பழனிவேல் கூறியுள்ளார். தேர்தல் முடிந்தவுடனேயே இயல்பாக தேர்தல் ஆணையம் கலைந்துவிடும். அப்படி இருக்கையில் எந்த தேர்தல் ஆணையத்தை சந்திக்கப் போகிறார்?”
“தேர்தல் ஆணையத்தை அமைக்கும் அதிகாரம் கட்சியின் தலைவருக்கு உள்ளது. அதன் படி, தேர்தல் ஆணையத்தை அமைத்து அதற்கு அவரே தலைமைப் பொறுப்பையும் ஏற்றார். ஆனால் அவர் தலைமையில் நடந்த தேர்தலில் தான் இத்தனை முறைகேடுகளும் நடந்துள்ளது.”
“மஇகா-வின் சங்கப்பதிவே ரத்து செய்யப்படக் கூடிய அபாய நிலைக்கு கொண்டு வந்துவிட்டார். தலைவர் என்ற முறையில் அவர் தான் இந்த தவறுக்குப் பொறுப்பேற்க வேண்டும். கட்சியின் சங்கப் பதிவு ரத்து செய்யப்படாது என்று அவர் உறுதிமொழி தரவேண்டும். மஇகா உறுப்பினர்களின் வாழ்க்கையில் அவர் விளையாடக் கூடாது. மஇகா தேர்தலில் தவறு செய்தவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும்.” என்று வேள்பாரி தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து, டத்தோ முனியாண்டி கூறுகையில், “மஇகா தலைமை கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தல் மூலம் மிகப் பெரிய தவறை செய்துவிட்டது. தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சியான மஇகா-வை பார்த்து மற்று கட்சிகள் சிரிக்கிறார்கள். இந்த நிலையை சரிசெய்ய நியாயமான முறையில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
பழனிவேல் தனது தவறுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், விரைவில் நியாயமான முறையில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று இக்கூட்டத்தில் கலந்து கொண்ட டத்தோ ஹென்ரி மற்றும் டத்தோ ஆர்.எஸ்.மணியம் உள்ளிட்ட தலைவர்களும் கருத்துத் தெரிவித்தனர்.
செய்தி, படங்கள் – ஃபீனிக்ஸ்தாசன்