கோலாலம்பூர்: டேவான் பகாசா அகராதியில் “தம்பி” என்ற வார்த்தைக்கு வழங்கப்பட்ட விளக்கம் குறித்த சர்ச்சைக்கு மஇகா செனட்டர் எஸ்.வேள்பாரியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது எவ்வளவு காலமாக உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“முதலாவதாக, தம்பி என்பது ஒரு தமிழ் சொல். இந்திய சொல் அல்ல. தம்பி என்பது ஒரு கண்ணியமான மற்றும் பாசமுள்ள சொல். நான் ஒரு மலாய் இளைஞரை ‘அடிக்’ (இளைய சகோதரர் அல்லது சகோதரி) என்று அழைப்பேன். இளையவர்களை அவ்வாறு அழைப்பது நமது ஆசிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
“இந்த மொழிபெயர்ப்பை யார் செய்திருந்தாலும், கெலிங் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது, நாட்டில் உள்ள இந்தியர்களை அவமதிக்கும் நோக்கத்தோடு செய்யப்பட்டது என்பது எனக்கு மிகவும் தெளிவாகத் தெரிகிறது,” என்று அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு தேசிய ஒற்றுமை அமைச்சரை வேள்பாரி கேட்டுக்கொண்டார்.
“இது அவர்கள் எங்களை நேரடியாக அவமதிக்கக்கூடிய நிலை. தேசிய ஒற்றுமை அமைச்சர் இதை உடனடியாக சரிபார்ப்பார் என்று நம்புகிறேன். தயவுசெய்து இது ஒரு தவறு என்று சொல்லாதீர்கள், அதைத் சரிப்படுத்துங்கள். யார் அதைச் செய்தார்கள் என்று விசாரிக்கவும். இது சமீபத்தியதாக இருந்தால், பொறுப்பான நபரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.