Home நாடு அன்வார் இப்ராகிம், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியத் தலைவர்களுடன் சந்திப்பு!

அன்வார் இப்ராகிம், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியத் தலைவர்களுடன் சந்திப்பு!

302
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) சட்டமன்ற, நாடாளுமன்ற இந்தியத் தலைவர்களையும், தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர் குழுவினரையும் சந்தித்தார்.

அந்த சந்திப்பின்போது “இந்திய சமூகத்தின் நலன் ஒருபோதும் ஓரங்கட்டப்படவில்லை, மேலும் கல்வி, வழிபாட்டுத் தலங்களின் நிர்மாணிப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய அம்சங்களிலும் எப்போதும் மேம்பாடு காணப்பட்டு வந்துள்ளது” என அவர் தெரிவித்தார்.

“நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்திய சமூகத்தின் ஊடகங்களுடனான சந்திப்பின் போது இந்த உறுதிமொழியை நான் தெரிவித்தேன். அதே வேளையில் அனைத்து இனங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை பங்கேற்பாளர்களுக்கு நினைவூட்டினேன்” என அன்வார் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

#TamilSchoolmychoice

இந்த சந்தர்ப்பத்தில், தீபாவளி கொண்டாட்டங்களை முன்னிட்டு RM1.5 மில்லியன் உணவுக் கூடைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

அதேசமயம் கெடா, ஜோகூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கு உள்ளிட்ட பல மாநிலங்களில் மயானங்கள், சுடுகாடுகள், மின்சுடலைகள் கட்டுமானத்திற்காக RM20 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அன்வார் தெரிவித்தார்.

“இந்திய மக்களுக்கான மதானி அரசாங்கத்தின் கவனிப்பும் அக்கறையும், அடுத்த அக்டோபர் 18 அன்று அறிவிக்கப்படவுள்ள 2025 வரவு செலவுத் திட்டம் மூலமும் முன்பு செயல்படுத்தப்பட்ட சில சிறப்பு திட்டங்கள் மூலமும் தொடரப்படும். இதற்கு முன்பே, அரசாங்கம் மலேசிய இந்திய சமூக மாற்றப் பிரிவான மித்ராவுக்கு  (MITRA) நிதி ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளதோடு, தேசிய தொழில் முனைவு குழு (TEKUN), பொருளாதார நிதி மற்றும் இந்திய சமூகத்திற்கான மலேசிய இக்தியார் அறக்கட்டளை போன்ற சில நிதிகளையும் சேர்த்துள்ளது. நாட்டில் இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார நிலை எதிர்காலத்தில் தொடர்ந்து இறைவன் அருளால் மேம்படும்” எனவும் அன்வார் தன் பதிவில் குறிப்பிட்டார்.