(எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது அமெரிக்க அதிபருக்கான தேர்தல். டொனால்ட் டிரம்ப் – கமலா ஹாரிஸ் இடையிலான போட்டி எப்படி முடியும் என்ற ஆர்வம் உலகமெங்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க தேர்தல் குறித்த சில சுவாரசியங்களை விவரிக்கிறார் இரா.முத்தரசன்)
- அதிபருக்கான வாக்களிப்பு ஏன் நவம்பரில் மட்டும் நடத்தப்படுகிறது?
- ஜனவரி 20 – அதிபர் பதவியேற்கும் நாளாக ஏன் நிர்ணயிக்கப்படுகிறது?
- துணையதிபர் வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.
2020-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் அப்போதைய நடப்பு அதிபராக இருந்த குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பை எதிர்த்து நிற்கும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்ததாக தனது துணையதிபர் வேட்பாளராக பைடன் யாரை நியமிக்கப் போகிறார் என்ற பரபரப்பு எழுந்தது. யாரும் எதிர்பாராதவிதமாக வித்தியாசப் பின்னணிகளைக் கொண்ட ஒரு பெண்மணியைத் தேர்ந்தெடுத்தார் பைடன். அவர்தான் கமலா ஹாரிஸ்.
தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்த வேளையில், அமெரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இந்தியாவின் தமிழ் நாட்டில், மன்னார்குடி நகருக்கு அருகில் உள்ள பைங்கா நாடு துளசேந்திரபுரம் என்ற ஊரில் கமலா ஹாரிஸ் அமெரிக்க துணையதிபராக வெற்றி பெற வேண்டும் என்ற பதாகை ஒன்று நிர்மாணிக்கப்படுகிறது. துளசேந்திரபுரத்தில் உள்ள தர்ம சாஸ்தா ஆலயத்தில் அவரது வெற்றிக்காக சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டன.
கமலா ஹாரிசுக்கும் துளசேந்திரபுரத்திற்கும் என்ன தொடர்பு என்பதில் தொடங்குகிறது அமெரிக்க அதிபருக்கான தேர்தலின் பல சுவாரசியங்கள். துளசேந்திரபுரம் என்ற அந்த ஊர்தான் கமலாவின் தாயார் சியாமளா கோபாலனின் பூர்வீகம்.
கமலா ஹாரிஸ் தாயார் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
2016-இல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப்பை எதிர்பாராதவிதமாக 2020 தேர்தலில் தோற்கடித்தார் பைடன். அதனால் துணையதிபராக கமலாவும் வெற்றி பெற்றார்.
துணையதிபர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை
அமெரிக்க அதிபர் தேர்தலில் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியம், அதிபர், துணையதிபர் என இருவர் போட்டியிட்டாலும், மக்கள் வாக்களிப்பது அதிபருக்கு மட்டும்தான்!
ஒவ்வொரு அதிபர் வேட்பாளரும் தனது துணை அதிபர் யார் என்பதை அறிவித்துவிட்டுத்தான் தேர்தலில் குதிப்பார். யார் அதிபராக வெற்றி பெறுகிறாரோ இயல்பாகவே அவர் பெயர் குறிப்பிடும் துணைதிபர் வேட்பாளரும் துணையதிபராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
அவ்வாறு 2020 துணையதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ், 2024 அதிபர் தேர்தலிலும் பைடனின் துணையதிபராகப் பெயர் குறிப்பிடப்பட்டார். ஆனால் முதுமை காரணமாக பைடன் அதிபர் தேர்தலில் தீவிரமாக ஈடுபட முடியாமல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசைப் பரிந்துரைத்தார். கட்சிப் பேராளர்களும் ஏற்றுக் கொள்ள இப்போது குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்புக்கு எதிராகக் களத்தில் நிற்கிறார் கமலா ஹாரிஸ்.
வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் – முதல் இந்திய வம்சாவளி அதிபர் –கறுப்பின சமூகத்தின் இரண்டாவது அதிபர் (முதலாவது கறுப்பின அதிபர் பராக் ஒபாமா) போன்ற சாதனைகளை கமலா ஹாரிஸ் நிகழ்த்துவார்.
அதிபர் தேர்தல் ஏன் நவம்பரில் நடத்தப்படுகிறது?
எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வாக்களிப்பு நடைபெறுகிறது. மற்ற நாடுகளில் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தேதிகளில் அதிபர் தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ நடைபெறும். ஆனால், அமெரிக்காவிலோ, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அதிபர் தேர்தல், அந்த ஆண்டின் நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையன்று நடத்தப்படுகிறது.
சரி! ஏன் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது? ஏன் அந்த மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்படுகிறது? காரணங்கள் இருக்கின்றன.
முதலாவது ஜனநாயக மரபில் யாரும் தேர்தலை ஒத்தி வைக்கக் கூடாது என்ற காரணத்தால் ஒரு குறிப்பிட்ட தேதி நிர்ணயிக்கப்பட்டு அந்தத் தேர்தலில் அதிபர் தேர்தல் கட்டாயமாக நடத்தப்படுகிறது.
அடுத்த காரணங்கள் வரலாற்று பூர்வமானவை. டிசம்பரில் கடும் குளிர் இருக்கும் என்பதால், அந்தக் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே, நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை அனைவரும் தேவாலயங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதால் ஞாயிற்றுக்கிழமை தவிர்க்கப்பட்டது. அந்தக் காலத்தில் வாக்களிக்கச் செல்பவர்கள் குதிரையில்தான் பயணித்தார்கள். எனவே, அடுத்த நாள் அதாவது திங்கட்கிழமை அவர்கள் குதிரையில் பயணித்து தாங்கள் வாக்களிக்க வேண்டிய இடங்களுக்கு சென்றடைந்து அதற்கு அடுத்த நாள் செவ்வாய்க்கிழமையன்று வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அடுத்த நாளான புதன்கிழமை அந்தக் காலத்தில் சந்தைகள் நடத்தப்படுவதற்கான தினம் என்பதால் அதற்கு முன்பாக வாக்களித்து விட்டு ஊர்திரும்ப வேண்டும் என்பதால்தான் செவ்வாய்க்கிழமையன்று வாக்களிப்பு நடத்தப்பட்டது.
இப்போது அத்தகைய காரணங்கள் நடைமுறையில் இல்லை என்றாலும், நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையன்று அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு என்பது நிரந்தர நடைமுறையாகிவிட்டது. இப்போதும் பின்பற்றப்படுகிறது. அதனால்தான் இந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வாக்களிப்பு நடைபெறுகிறது.
அடுத்த சில நாட்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றியாளர் அதிபராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் அவர் உடனடியாகப் பதவி ஏற்க முடியாது. ஜனவரி 20-ஆம் தேதிதான் அவர் பதவி ஏற்பார். அதுவரையில் அவர் தன் அமைச்சரவையை, சிறப்பு உயர்நிலை அதிகாரிகளை நியமிக்க அந்தக் கால அவகாசத்தை அவர் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இடைப்பட்ட காலத்தில் அதாவது நவம்பர் தொடங்கி ஜனவரி 20 வரையில் அவர் தனது அடுத்த அரசாங்கத்தை நியமிப்பதற்கு ஏதுவாக, அமெரிக்க அரசாங்கமே அதற்கான செலவினங்களை வழங்கும்.
அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபரின் 4 ஆண்டு தவணைக் காலம் குறிப்பிட்ட ஆண்டின் ஜனவரி 20-ஆம் தேதி நண்பகல்தான் தொடங்குகிறது. அதனால்தான் ஜனவரி 20-ஆம் தேதி காலையில் அதிபர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டு அதன் பின்னர் அவர் தனது பணிகளைத் தொடங்குவார்.
1930-ஆம் ஆண்டுகளில் நவம்பரில் தேர்தல் நடத்தப்பட்டாலும் வாக்குகள் எண்ணப்படுவதில் காலதாமதம் ஆகியதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில்கூட அதிபர், பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படாமல் காத்திருந்த காலங்களும் உண்டு.
இதுபோன்ற பல சுவாரசியங்களைக் கொண்டது அமெரிக்க அதிபர் தேர்தல். உலகமே உன்னிப்பாக உற்று நோக்கும் தேர்தல். யார் வெற்றி பெற்றாலும் அதனால் உலகளவில் தாக்கங்கள் ஏற்படும். எனவே, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஓசையிலும் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த சுவாரசியங்கள் – வேட்பாளர்களின் பின்னணிகள் – அவர்களின் வெற்றி வாய்ப்புகள் – போன்ற அம்சங்களைத் தொடர்ந்து கண்ணோட்டமிடுவோம்.