Home உலகம் இலங்கையின் புதிய அதிபர் அனுராவை இந்தியத் தூதர் சந்தித்தார்!

இலங்கையின் புதிய அதிபர் அனுராவை இந்தியத் தூதர் சந்தித்தார்!

275
0
SHARE
Ad
இலங்கைக்கான இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா அதிபர் அனுராவைச் சந்தித்தபோது…

கொழும்பு : ஒரு வழியாக இலங்கை அதிபர் தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது. இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியின் 55 வயதான தலைவர் அனுர குமார திசாநாயக்க அதிபர்ராக தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இரண்டாவது வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். நடப்பு அதிபராக பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்க மூன்றாவது இடத்தைப் பிடித்து முதல் சுற்றுக்குப் பிறகு நீக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

மார்க்சிய சாய்வு கொண்ட அனுர குமார திசாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது உலக அளவில் ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது. கம்யூனிச நாடுகளிலேயே மார்க்சிய தத்துவங்கள் ஆதரவு இழந்து வரும் நிலையில் இலங்கையில் அந்த சித்தாந்தங்களைக் கொண்ட அதிபர் ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

எந்த வேட்பாளரும் முதல் கட்ட எண்ணிக்கையில் 50 சதவீத வாக்குகளைப் பெறாததால், நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் அதிகாரிகள் இரண்டாம் விருப்ப வாக்குகளை எண்ணினர்.

அந்த வாக்கு எண்ணிக்கையிலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா இரண்டாவது இடத்தையே பிடித்தார். அதேசமயம் பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்க மிகவும் பின்தங்கிய வாக்குகளோடு மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இலங்கை அதிபர் தேர்தல் நாட்டின் அரசியல் களத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. செப்டம்பர் 21, 2024 அன்று நடைபெற்ற இத்தேர்தலில், தேசிய மக்கள் சக்தி (NPP) வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றிருப்பது இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

அனுர குமார திசாநாயக்க, ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியின் தலைவர், NPP கூட்டணியின் முக்கிய உறுப்பினர். அவரது வெற்றி பல காரணிகளால் சாத்தியமானது. முதலாவதாக, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல் மீதான மக்களின் அதிருப்தி. இரண்டாவதாக, இளம் வாக்காளர்களிடையே அவர் பெற்ற ஆதரவு. மூன்றாவதாக, சமூக நீதி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்த அவரது தெளிவான நிலைப்பாடு.

திசாநாயக்கவின் வெற்றி இலங்கையின் பாரம்பரிய இரு கட்சி அமைப்புக்கு ஒரு சவாலாக அமைந்திருக்கிறது. திசாநாயக்க ஊழலற்ற, வெளிப்படையான அரசாங்கத்தை உருவாக்குவதாக உறுதியளித்துள்ளார். மேலும், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான திட்டங்களையும் முன்வைத்துள்ளார்.

எனினும், திசாநாயக்க பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாட்டின் கடன் சுமை, வேலையின்மை, பணவீக்கம் ஆகியவற்றைக் கையாள்வது அவற்றில் முக்கியமானவை. அத்துடன், இன ஒற்றுமையை வலுப்படுத்துவதும் ஒரு முக்கிய பணியாகும்.

இந்த வெற்றி இலங்கை மக்களின் மாற்றத்திற்கான விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. திசாநாயக்கவின் தலைமையில் நாடு எவ்வாறு முன்னேறும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அவரது செயல்பாடுகள் இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என்பது உறுதி.

குறிப்பாக உலகம் எங்கிலும் உள்ள தமிழர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சனையை திசாநாயக்க எவ்வாறு அணுகப் போகிறார் என்பது குறித்து ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். தன் பிரச்சாரங்களில் தமிழர் பிரச்சனைகளை திசாநாயக்க முன்வைக்கவில்லை. அவர்களின் ஆதரவையும் கோரவில்லை. அவர்களுக்கான திட்டங்கள் எதையும் குறிப்பிடவும் இல்லை.

எனவே, தமிழர்கள் விவகாரத்தில் திசாநாயக்கவின் முன்னெடுப்பு எப்படியிருக்கும் என்பதைக் காணவும் அரசியல் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கின்றனர்.

இதற்கிடையில் திசாநாயக்க அதிபராக அறிவிக்கப்பட்டதும் இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதன் மூலம் இந்தியாவும் திசாநாயக்கவுடன் நெருக்கம் பாராட்டத் தொடங்கியிருக்கிறது.