Home நாடு இந்திய மாணவர்களுக்கு 100 மில்லியன் நிதி – பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரைக்கு பரவலான பாராட்டு!

இந்திய மாணவர்களுக்கு 100 மில்லியன் நிதி – பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரைக்கு பரவலான பாராட்டு!

180
0
SHARE
Ad
ஷாரெட்சான் ஜோஹான் – பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர்

கோலாலம்பூர்: தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஜசெகவைச் சேர்ந்த பாங்கி (சிலாங்கூர்) நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெட்சான் ஜோஹான் இந்திய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக முன்வைத்திருக்கும் பரிந்துரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதிலும் இந்தியர் அல்லாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இத்தகைய திட்டத்தை நாடாளுமன்றத்தில் பரிந்துரைத்திருப்பது, இந்திய சமூக ஊடகங்களில் பாராட்டுகளோடு விவாதிக்கப்பட்டு வருகிறது. பரவலான வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்திய சமூக உருமாற்றத் திட்டமான மித்ராவுக்கு வழங்கப்படும் மானியமும், தெக்குன் என்னும் தேசிய தொழில் முனைவோர் பொருளாதார நிதிக்கு (National Entrepreneurial Group Economic Fund -Tekun) வழங்கப்படும் நிதியும் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் அதே வேளையில், இந்திய சமூகத்தில் அதிரடி உருமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் புதிதாக 100 மில்லியன் கல்வி நிதி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என ஷாரெட்சான் ஜோஹான் கோரிக்கை வைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த புதிய கல்வி நிதித் திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு ஏழை இந்திய  குடும்பத்திலிருந்தும் வரும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரிங்கிட் வழங்க ஷாரெட்சான் ஜோஹான் கோரிக்கை விடுத்தார். மித்ரா மூலம் தற்போது வழங்கப்படும் 2 ஆயிரம் ரிங்கிட் ஒரு நல்ல மடிக் கணினி (லேப்டோப்) வாங்குவதற்கே போதவில்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்குவதன் மூலம் சுமார் 5,000 மாணவர்களுக்கு நாம் உதவ முடியும் – இந்திய சமூகமே மாற்றம் பெறும் – என்பது ஷாரெட்சான் தெரிவிக்கும் இன்னொரு தகவல்.

குறைந்த வருமானமுடைய குடும்பங்களில் இருந்து வரும் இந்திய மாணவர்கள் பல்கலைக் கழகங்களில் சேரும்போது கடுமையான நிதிப் பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார்கள். அதிலும் தனியார் பல்கலைக் கழகங்களில் அவர்கள் இணைந்தால் அவர்களின் குடும்பத்தின் பெரும்பகுதி வருமானம் அவர்களின் கல்விக் கட்டணத்திற்கே செலவாகி விடுகிறது எனவும் ஷாரெட்சான் தன் நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆண்டுதோறும் மித்ராவுக்கு வழங்கப்படும் 100 மில்லியன் ரிங்கிட் சில நன்மைகளை இந்திய சமூகத்திற்கு செய்தாலும் அதனால் குறிப்பிடத்தக்க பலன்கள் விளையவில்லை. இதனால் குறைகூறல்கள் நிறைய எழுந்துள்ளன.

இந்திய சமூகம் பல்வேறு முனைகளில் – குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்பு துறைகளில் – மற்ற சமூகங்களோடு ஒப்பிடும்போது – புறக்கணிக்கப்பட்ட நிலையில், நிலைதாழ்ந்து இருப்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும் என்றும் ஷாரெட்சான் ஜோஹான்  வலியுறுத்தியுள்ளார்.

ஒரு மலாய்க்கார நாடாளுமன்ற உறுப்பினர், இத்தகைய கருத்துகளை இந்திய சமூகத்திற்கு ஆதரவான கருத்துகளை முன்வைத்திருப்பது பரவலான பாராட்டுகளைப் பெற்றிருப்பதோடு, சமூக ஊடகங்களிலும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.