கோலாலம்பூர் : மலேசியாவில் பொதுவாக இந்தியர்களைக் குறிப்பிடும்போது மற்ற இனத்தவர் “கெலிங்” என்ற சொல்லைப் பயன்படுத்துவது வழக்கம். இந்தச் சொல் தரக்குறைவான சொல்லாகப் பயன்படுத்தப்படுகின்றது என்றும், இந்தியர்களை மட்டம் தட்டப் பயன்படுத்தப்படுகிறது என்றும் இந்திய சமூகத்தில் நீண்ட காலமாக குமுறல்களும் கண்டனங்களும் எழுந்து வந்துள்ளன.
அப்படி இருந்தும் தற்போது டேவான் பகாசா டான் புஸ்தாகா வெளியிட்டிருக்கும் இயங்கலை வழியான அகராதியிலேயே இந்த சொல் பயன்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நமது நாட்டில் மலாய் மொழியின் பயன்பாட்டையும், வளமையையும் உயர்த்தவும். அந்த மொழிக்கான வளர்ச்சியிலும் பரப்புதலுக்கும் பாடுபடவும் உருவாக்கப்பட்ட அமைப்புதான் டேவான் பகாசா டான் புஸ்தாகா. அதுபோன்ற ஓர் தேசிய அரசாங்க அமைப்பின் அகராதியிலேயே கெலிங் என்ற தகாத சொல் இடம்பெற்றிருக்கிறது.
தம்பி (Tambi) என்ற சொல்லுக்கான விளக்கத்தை வழங்கியிருக்கும் டேவான் பகாசா அகராதி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது:
அதன்படி, தம்பி என்றால் “நம்மை விட இளையவர்களை கெலிங் மக்கள் இப்படித்தான் கூப்பிடுவர்” என்ற விளக்கத்தை டேவான் பகாசா வழங்கியிருக்கிறது.
தம்பி என்ற சொல்லுக்கு இரண்டாவது விளக்கமாக, ஓர் அலுவலகத்தில் ஆபீஸ் பையனாக இருப்பவனை அதாவது பியூனை இப்படித்தான் அழைப்பார்கள் என்ற மற்றொரு விளக்கத்தையும் டேவான் பகாசா வழங்கியிருக்கிறது.
இதுவும் தவறான விளக்கமாகும். காரணம் தமிழில் தம்பி என்பது இளைய சகோதரனைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். மற்ற இனத்தவர்கள் தம்பி என்று இளையவர்களை அழைப்பது மரியாதையான சொற்பிரயோகம்தான். என்றாலும் தம்பி என்ற சொல்லே ஆபீஸ் பியூனைத்தான் குறிக்கும் என்ற நோக்கில் டேவான் பகாசா விளக்கமளித்திருக்கிறது.
மேலும் தம்பி என்ற சொல்லுக்கு விளக்கமளிக்க முற்படும்போது “கெலிங்” என்ற தரக் குறைவான சொல்லை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. இந்திய சமூகத்தில் இவ்வாறு அழைப்பார்கள் என்று கூறியிருக்கலாம். அதை விடுத்து ஏன் இந்திய சமூகத்தை இழிவுபடுத்தும் விதத்தில் “கெலிங்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற கண்டனமும் நம் மனங்களில் எழவே செய்கிறது.