சென்னை : சிந்து சமவெளி நாகரிகம் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கை சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 5-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்து உரையாற்றினார்.
தனதுரையில் இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் தமிழின் தலைமையிடத்தை உறுதிசெய்யும் நம் முயற்சிகள் தொடரும் எனக் கூறிய ஸ்டாலின் பொய்ப் புனைவுகளை உடைப்போம்! மெய்ப்பொருள் காண்போம்! ஜான் மார்ஷல் அவர்கள் நூறாண்டுகளுக்கு முன்பு தொடங்கியதை நாம் நிறைவுசெய்வோம் என முழங்கினார்.
சிந்து வெளி எழுத்துகளை வெளிக்கொண்டு வருபவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு கருத்தரங்கம் இன்று ஜனவரி 5 முதல் 7- ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் சிந்து சமவெளி ஆய்வுகளைக்கு காரணமான சர் ஜான் மார்ஷல் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
‘சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்; ஒரு வடிவவியல் ஆய்வு’ என்னும் நூலினையும் இந்நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
“சிந்துவெளி எழுத்து வடிவ நாகரிகம் குறித்து விளக்கம் அளிக்கும் அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்கன் டாலர் வழங்கப்படும். சிந்துவெளி நாகரிக ஆராய்ச்சி மேற்கொள்ள தலை சிறந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க 2 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும். கல்வெட்டு ஆய்வாளர்கள் ஆகியோர்களை ஊக்கவிக்கும் வகையில் ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்” எனவும் ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருவதைச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின் சிந்துவெளி நாகரிகத்தின் குறியீடுகளும் தமிழ்நாட்டில் கிடைக்கப் பெற்ற குறியீடுகளும் 60 விழுக்காடு ஒரே தன்மையிலான குறியீடுகளாக காணப்படுகிறது எனப் பெருமிதம் கொண்டார். சிந்துவெளி நாகரிகம் தமிழ்நாடு இரும்பு காலமும் சமகாலம் என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.