கோலாலம்பூர்: ஏதாவது ஒரு வகையில் இன்று மலரும் திங்கட்கிழமை ஜனவரி 6-ஆம் தேதி மலேசிய அரசியல் வரலாற்றில் ஒரு முத்திரையை பொறிக்கவிருக்கிறது. எஞ்சிய சிறைத் தண்டனையை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் வீட்டுக்காவலில் அனுபவிக்கும் வண்ணம் நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்குமா? என்பது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கும் கேள்வி!
அம்னோ ரத்து செய்தாலும் நஜிப்புக்கு ஆதரவான பேரணியில் மக்கள் திரள்வார்களா என்பது இன்றைய தினம் எதிர்பார்க்கப்படும் இன்னொரு கேள்வி!
அம்னோ நஜிப்புக்கான ஆதரவு பேரணியை ரத்து செய்தாலும் பத்துமலை வளாகத்தில் பிரார்த்தனை கூட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறது மஇகா.
இதற்கிடையில் காவல்துறையினரின் கடுமையான எச்சரிக்கைகளையும் மீறி – மாமன்னர் சார்பிலான அரண்மனை விளக்கத்தையும் மீறி – வீதிகளில் மக்கள் நஜிப்புக்கு ஆதரவாகத் திரள்வார்களா? என்ற ஆர்வமும் அரசியல் பார்வையாளர்களிடேயே எழுந்திருக்கிறது.
அம்னோ பின்வாங்கினாலும், பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியூடின் ஹசான் பேரணியில் பாஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து கலந்து கொள்வார்கள் என அறிவித்திருக்கிறார்.
இன்றைய ஜனவரி 6-ஆம் தேதி நம்மைக் கடந்து செல்லும்போது, அடுத்தடுத்த நாட்களில் நடப்பு அரசியல் சூழலில் மாற்றங்கள் நிகழுமா என்பதும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.
ஆக, ஒருகாலத்தில் தான் பிரதமராக இருந்தபோது, அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட வீதிப் போராட்டங்களை காவல்துறையினரின் ஆதரவோடு அடக்கியவர் நஜிப்.
இன்று அவருக்கே அந்த சூழல் வாய்த்திருக்கிறது. அவருக்கு ஆதரவாக நடத்தப்படவிருந்த பேரணிக்குத் தடை விதித்திருக்கிறது காவல்துறை.
சர்ச்சையாகியிருக்கிறது நஜிப் தண்டனை குறைப்பு மீதான மன்னிப்பு வாரியத்தின் முடிவு. மன்னிப்பு வாரியத்தின் முடிவில் கூடுதலாக எஞ்சிய சிறைத்தண்டனையை நஜிப் வீட்டுக் காவலில் அனுபவிக்க வேண்டும் என்ற தனது குறிப்பு இருப்பதாக பகாங் ஆட்சியாளரும், முன்னாள் மாமன்னருமான சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமத் ஷா தனக்கு தெரிவித்ததாக நஜிப்பின் மகன் முகமட் நிசார் ஏற்கனவே சத்தியப் பிரமாணம் ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.