கோலாலம்பூர்: எதிர்வரும் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறவிருந்த நஜிப் துன் ரசாக்குக்கானா ஆதரவு பேரணியில் ஆயிரக்கணக்கான மஇகாவினர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அம்னோ அந்தப் பேரணியை ரத்து செய்துள்ளது.
எனினும் மஇகா சார்பில் நஜிப்புக்கு ஆதரவாக பிரம்மாண்டமான பிரார்த்தனைக் கூட்டம் திங்கட்கிழமை ஜனவரி 6-ஆம் தேதி காலை 11.00 மணிக்கு பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் நடைபெறும் என மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அறிவித்துள்ளார். இதற்கான ஊடகவியலாளர்களுக்கான விளக்கக் கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) மஇகா தலைமையகத்தில் மதியம் 12.00 மணிக்கு நடைபெறும். அதைத் தொடர்ந்து மதிய உணவு விருந்துபசரிப்பும் நடைபெறும்.
மலேசிய இந்தியர்கள் திரளாக இந்தப் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டு டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தன் எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிக்கும் வகையில் நீதி கிடைக்க பிரார்த்தனை செய்யுமாறு டத்தோஸ்ரீ எம்.சரவணன் கேட்டுக் கொண்டார்.
முன்னாள் பிரதமருக்கு நீதி கிடைப்பதற்காக நடத்தப்படும் பிரார்த்தனை இது என்று அவர் வர்ணித்தார்.
சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் வீட்டுக் காவலில் எஞ்சிய தண்டனையை அனுபவிக்க முன்னாள் மாமன்னர் உத்தரவிட்டார் எனக் கூறப்படும் ராஜ விவகாரம் தொடர்பாக நஜிப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே பேரணியின் நோக்கம் என்றும், இது “கட்சி மற்றும் இன அரசியலுக்கு” அப்பாற்பட்டது என்றும் எம்.சரவணன் ஏற்கனவே விடுத்திருந்த அறிக்கையில் விளக்கியிருந்தார்.
மன்னிப்பு வாரியத்தின் முடிவில் கூடுதலாக எஞ்சிய சிறைத்தண்டனையை நஜிப் வீட்டுக் காவலில் அனுபவிக்க வேண்டும் என்ற தனது குறிப்பு இருப்பதாக பகாங் ஆட்சியாளரும், முன்னாள் மாமன்னருமான சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமத் ஷா தனக்கு தெரிவித்ததாக நஜிப்பின் மகன் முகமட் நிசார் ஏற்கனவே சத்தியப் பிரமாணம் ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
பேரணியை ரத்து செய்யும் அம்னோவின் முடிவைத் தொடர்ந்து, பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியூடின் ஹசான் பேரணியில் பாஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து கலந்து கொள்வார்கள் என அறிவித்திருக்கிறார்.